search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 2 மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர் பாதிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் 2 மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர் பாதிப்பு

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    நாகர்கோவில்:

    கேரளாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு ஏராளமானோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்து விட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கேரள மாநிலத்தையொட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக 950 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுத்து வருகிறார்கள்.

    மேலும் டெங்கு கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். கொசு மருந்து அடிப்பது, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குவது போன்ற பணிகளும் நடந்து வருகிறது. ஆனாலும் குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது.

    கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை ஒரு நாளைக்கு 30 முதல் 40 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் ஆசாரிப்பள்ளம், தக்கலை, குழித்துறை அரசு ஆஸ்பத்திரிகளில் 32 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஏராளமான பேர் டெங்கு பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளில் நாளுக்கு நாள் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் கடந்த 2 மாதத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×