search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இட்லி மாவு - சாம்பார், தண்ணீர் பரிசோதனை: சுகாதார சீர்கேடு என்று மாணவிகள் புகார்
    X

    இட்லி மாவு - சாம்பார், தண்ணீர் பரிசோதனை: சுகாதார சீர்கேடு என்று மாணவிகள் புகார்

    உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை இட்லி மாவு-சாம்பார், தண்ணீர் பரிசோதனை சுகாதார சீர்கேடு என்று மாணவிகள் புகார்
    சென்னை:

    காயிதே மில்லத் கல்லூரி அரசு விடுதி மாணவிகள் வாந்தி-மயக்கத்தால் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் இன்று காலையில், சுகாதார துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கல்லூரிக்கு பின்புறம் உள்ள விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் மற்றும் அதிகாரிகள் நேற்று சமைக்கப்பட்ட இட்லி, சாம்பார், மிதமான இட்லி மாவு, சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் ஆகியவற்றை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

    டப்பாக்களில் உணவு மற்றும் தண்ணீரை சேகரித்து சீல் வைப்பது போல மூடி அடைத்து டப்பாக்களை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

    இது தொடர்பாக டாக்டர் கதிரவன் கூறியதாவது:-

    உணவு பாதுகாப்பு துறை சார்பில் எடுக்கப்பட்ட இந்த உணவு மாதிரிகளின் சோதனை முடிவதற்கு 15 நாட்கள் வரை ஆகும். ஆனால் விரைவாக பரிசோதனையை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக விடுதி நிர்வாகத்துக்கு நோட்டீசு கொடுத்துள்ளோம். விடுதி கமிட்டி, மாணவிகள் கமிட்டி, துப்புரவாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளோம். சமையல் அறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டதா? என்பது பற்றியும் ஆய்வு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவிகள் விடுதியில் 400 பேர் தங்கி படித்து வருகிறார்கள். விடுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 7 நாட்கள் அதனை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று காலையில் விடுதி மூடப்பட்டது.

    மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஒரு சில மாணவிகள் தனியாக தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். மாணவிகள் பலரை பெற்றோர்கள் நேரில் வந்து அழைத்துச் சென்றனர். 31-ந் தேதி காலையிலேயே விடுதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விடுதியில் வழங்கப்படும் சாப்பாடு தரம் குறைந்ததாகவே உள்ளது. சுகாதார சீர்கேடும் நிலவுகிறது என்று மாணவிகள் குற்றம் சாட்டினர். கண்களை மூடிக் கொண்டுதான் சாப்பாட்டை சாப்பிட முடியும் என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

    Next Story
    ×