search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழலைப்பற்றி பேச உரிமை உண்டு: கமல்ஹாசன் தமிழர், நம்மில் ஒருவர் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
    X

    ஊழலைப்பற்றி பேச உரிமை உண்டு: கமல்ஹாசன் தமிழர், நம்மில் ஒருவர் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

    நடிகர் கமல் ஒரு தமிழர், அவர் நம்மில் ஒருவர், அரசின் ஊழலை பற்றி பேச அனைவருக்கும் உரிமை உண்டு என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்து முத்தியால்பேட்டை பகுதியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட புரட்சிதலைவி அம்மா அணியின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மைத்ரேயன் எம்பி., தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    மக்களின் ஆதரவினை பெருவாரியாக பெற்று ஆட்சி நடத்திய ஜெயலலிதாவின் பெயரால் நடைபெறுகின்ற தற்போதைய ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் பரவிக்கிடக்கிறது. இதனால் எம்.ஜி.ஆர். உருவாக்கி ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட இயக்கத்திற்கு அவப்பெயர் உண்டாகி உள்ளது.

    நடிகர் கமல் ஒரு தமிழர் அவர் நம்மில் ஒருவர் அரசின் ஊழலை பற்றி
    பேச அனைவருக்கும் உரிமை உண்டு. அரசினை பற்றி கமல்ஹாசன் உள்ளிட்ட யாரும் விமர்சனம் செய்யலாம். அதற்கு உரிய முறையில் விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். யாரையும் மிரட்டுவது அரசின் வேலை அல்ல.

    நீட் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பாதிப்படையும் காரணத்தினால் இத்தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும்.

    அணிகள் இணைய வேண்டுமென பேசுபவர்கள் எங்களை கிண்டல் கேலி செய்யும் விதமாக பேட்டிகள் அளிப்பது அதிகாரம் எங்கள் கையில் உள்ளது என்ற ஆணவத்துடன் செயல்படுவது என்பது அவர்களின் கபட நாடகத்தையே காட்டுகிறது.

    உண்மையான அ.தி.மு.க. என்பது நாங்கள்தான் என்பதை இங்கு பல்லாயிரக்கணக்காண அளவில் பாசத்துடன் கூடியுள்ள புரட்சித்தலைவர் மீதும் அம்மா மீதும் பாசம்கொண்டு திரண்டுள்ள பெண்களே சாட்சி.

    பணம் அவர்கள் பக்கம் இருந்தாலும் பாசம் நம் பக்கம் தான் உள்ளது. நாளைய அரசியல் வரலாறு உங்கள் ஒத்துழைப்புடன் நிச்சயம் மாறும். ஊழல் மலிந்த இந்த ஆட்சி அகற்றப்பட்டு உண்மையான அ.தி.மு.க. ஆட்சி மலரும்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா வரும் அக்டோபர் மாதம் 17-ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உறுதியளித்துள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆருயுடன் கலைத்துறையில் பணியாற்றியவர்களு மூத்த கழக தொண்டர்களும் கவுரவிக்கப்படுவார்கள்.

    அணிகள் இணைய அம்மாவின் மரணம் குறித்து நீதிவிசாரணை வேண்டும் என்ற எங்கள் நிபந்தனை அப்படியே தான் உள்ளது.

    அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அம்மாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எந்தவிதமான விசாரணைக்கும் தயார் என அறிவித்த பிறகும் அது குறித்த நீதி விசாரணைக்கு உத்தரவிட எடப்பாடியின் அரசு தயங்குவது ஏன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மதுசூதனன், பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ம.பா.பாண்டியராஜன், செம்மலை, ஜே.சி.டி.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×