search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் மேலும் 2 ‘குட்கா’ குடோன்களில் சோதனை: வியாபாரிகள் 5 பேர் கைது
    X

    சென்னையில் மேலும் 2 ‘குட்கா’ குடோன்களில் சோதனை: வியாபாரிகள் 5 பேர் கைது

    சென்னையில் ஒரே நாளில் 2 குட்கா குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதுதொடர்பாக வியாபாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் தங்கு தடையின்றி தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    சென்னையில் மாதவரம் பகுதியில் இயங்கி வந்த குட்கா குடோன் ஒன்றை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். அங்கு நடத்திய சோதனையில் டைரி ஒன்று சிக்கியது.

    அதில் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் இடம் பெற்று இருந்தது. இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்ததையடுத்து குட்கா வேட்டையில் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையிலும் போலீஸ் வேட்டை தொடர்கிறது.

    கடந்த சில நாட்களில் மட்டும் 700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை சூளையில் செயல்பட்டு வந்த குட்கா தொழிற்சாலை 2 நாட்களுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்து ஏராளமான குட்கா போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    குடோனில் இருந்து கட்டுக்கட்டாக பணமும் கைப்பற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 2 குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.

    பூந்தமல்லி எழில்நகர் சர்ச் குறுக்கு தெருவில் ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அலெக்சாண்டர், பாஸ்கர், பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்று குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 25 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து குட்காவை வாகனங்களில் எடுத்து வரும் டிரைவர் அரிராம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது பாரிமுனை பகுதியில் இருந்து குட்காவை கடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் குட்கா குடோனின் உரிமையாளரும் அவரே என்பது தெரிய வந்தது.

    அங்கிருந்து போரூர், பூந்தமல்லி பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளுக்கு குட்கா இவர் சப்ளை செய்வது தெரிய வந்தது.

    இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து ரகசியமாக குட்காவை வரவழைத்து கொத்தவால்சாவடியில் பதுக்கி வைத்து பல பகுதிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் கொத்தவால்சாவடியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது குட்கா வியாபாரத்தில் ஈடுபட்ட அஞ்சுபாபு, பால்ராஜ், பவித்ரன், சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை கைப்பற்றினார்கள்.

    போலீஸ் விசாரணையில் மாதவரத்தை அடுத்த வடபெரும்பாக்கத்திலும் குட்கா குடோன் செயல்பட்டது தெரிய வந்தது. அங்கு சென்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த குடானிலும் ஏராளமான குட்கா பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டது தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×