search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு குழப்பத்தால் 5 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் என்ஜினீயரிங் கலந்தாய்வில் பங்கேற்பு
    X

    நீட் தேர்வு குழப்பத்தால் 5 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் என்ஜினீயரிங் கலந்தாய்வில் பங்கேற்பு

    நீட் தேர்வு குழப்பம் காரணமாக எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர இருந்த சுமார் ஐந்தாயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் கலந்தாய்வில் பங்கேற்று வருகின்றனர்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்னும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறாமல் காலதாமதம் ஆகிவருகிறது. நீட்தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பிற்கு சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இதுவரையில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு இது அதிர்ச்சி அளித்தது.

    எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கனவுடன் படித்த மாணவ -மாணவிகள் நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள்.

    சி.பி.எஸ்.இ. பாடம் திட்டத்தில் படித்த மாணவ -மாணவிகள் மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தனர். மாநில பாடத் திட்டத்தில் படித்து மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் பெற்று சேர்வதற்கு தகுதியாக உள்ள மாணவர்கள் இதில் வெற்றி பெற முடியவில்லை.

    பள்ளியிலும் மாவட்ட, மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்களும் மருத்துவ பாடங்களில் உயர்ந்த கட்-ஆப் பெற்ற மாணவ- மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் அவர்களின் எம்.பி.பி.எஸ் கனவுகள் எல்லாம் தகர்ந்து விட்டது. மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    தங்களின் குழந்தைகள் இவ்வளவு கஷ்டப்பட்டு படித்தும் பயன் இல்லாமல் போய் விட்டதே என்ற ஏக்கத்தில் உள்ளனர். மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தள்ளிப் போகின்ற நிலையிலும் அதிக மதிப்பெண் பெற்ற மருத்துவ மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேரவும் விண்ணப்பித்து இருந்தனர்.

    நீட் தேர்வு அடிப்படையில் தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டு ஆணையின்படி மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்ததால் தமிழக கிராமப்புற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை ஏற்கனவே ஒரு முறை சந்தித்து வலியுறுத்தினார்கள்.

    இந்த நிலையில் மீண்டும் அழுத்தம் கொடுக்க அமைச்சர்கள் ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், தங்கமணி, சி.வி.சண்முகம், வேலுமணி ஆகியோர் டெல்லி சென்றனர்.

    இதற்கிடையில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கி நடைபெறுவதால் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர இருந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். இந்த வாரத்தில் நடக்கும் கலந்தாய்வில் அவர்கள் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

    கலந்தாய்வில் பங்கேற்று வரும் மாணவ-மாணவிகள் விருப்பம் இல்லாமல், வேறு வழி தெரியாமல் பொறியியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து வருகின்றனர்.

    மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் படித்த அவர்கள் தங்கள் பாதை மாறி சென்றுள்ளதை எண்ணி வருந்துகிறார்கள்.

    பொறியியல் கலந்தாய்வில் மருத்துவ மாணவர்கள் தற்போது பங்கேற்று வருகின்ற நிலையில் நீட் தேர்விற்கு விலக்கு கிடைத்து விட்டால் அந்த மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு மாறிவிடுவார்கள். இதனால் ஏற்படும் பொறியியல் காலி இடங்களை நிரப்ப இயலாத நிலை இந்த ஆண்டு உருவாகிறது.
    Next Story
    ×