search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் ஆவணம் மாயம்: அமைச்சர் - அதிகாரிகள் மீதான விசாரணை நடத்த உத்தரவு
    X

    குட்கா ஊழல் ஆவணம் மாயம்: அமைச்சர் - அதிகாரிகள் மீதான விசாரணை நடத்த உத்தரவு

    குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்கள் மாயமானதால், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாகவும், போலீஸ் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா விற்பதற்கு அனுமதி அளித்து இருப்பதாகவும் நிறைய புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் மத்திய வருமான வரித்துறையினர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது குட்கா உற்பத்தியாளர் ஒருவர் வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்று அதிகாரிகள் கையில் சிக்கியது.

    அந்த டைரியில் குட்காவை இடையூறு இல்லாமல் விற்பதற்கு யார்-யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு வருகிறது? மாதம்தோறும் அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது என்பன போன்ற முழு விவரமும் இருந்தது. இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த குட்கா உற்பத்தியாளரிடம் விசாரணை நடத்திய போது அவர் மாதம்தோறும் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுப்பதை ஒத்துக்கொண்டார்.

    வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திய போது தமிழக அமைச்சர் ஒருவர் குட்கா உற்பத்தியாளரிடம் இருந்து மாதம் மாதம் லஞ்சம் பெற்றது உறுதியானது. அதுபோல சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மற்றும் இரண்டு துணை கமி‌ஷனர்களும் லஞ்சம் பெற்றதாக தகவல்கள் வெளியானது.

    இவை அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த குட்கா உற்பத்தியாளரிடம் வாக்குமூலமாக பெற்று பதிவு செய்தனர். பிறகு இது பற்றி தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் எழுதினார்கள்.

    இதையடுத்து ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. உடனே வருமான வரித் துறையின் முதன்மை இயக்குனர் (விசாரணை) பி.ஆர்.பாலகிருஷ்ணன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி தலைமை செயலகத்துக்கு சென்று குட்கா உற்பத்தியாளர் தெரிவித்த தகவல்கள் மற்றும் டைரி குறிப்புகள் கொண்ட ஆவணங்களின் தொகுப்பை அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன் ராவிடம் வழங்கினார்.

    அதுபோல குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரிகள் தகவல்கள் அடங்கிய பட்டியலை அவர், அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. அசோக் குமாரை சந்தித்து கொடுத்தார்.

    இதையடுத்து அந்த ஆவணங்கள் அனைத்தும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

    சில மாதங்கள் கழித்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், மேலும் ஆதாரங்களை தருமாறு கேட்டனர். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஒரு தடவை ஆவணங்களைக் கொடுத்தனர்.

    குட்கா விற்க கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில், இந்த விவகாரத்தில் சமீபத்தில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டது. வருமான வரித்துறை எங்களிடம் எந்த ஆவணங்களையும், ஆதாரங்களையும் தரவில்லை என்று தமிழக அரசு கூறியது. இது வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கோர்ட்டிலும் தமிழக அரசு இந்த பதிலையே கூறியது. ஆனால் உண்மையில் குட்கா விற்பனை முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறை கொடுத்த முக்கிய ஆதாரங்கள், ஆவணங்கள் அனைத்தும் மாயமாகி விட்டதாக தெரிய வந்துள்ளது. அந்த ஆவணங்கள் என்ன ஆனது என்பது புரியாத புதிராக, மர்மமாக உள்ளது.

    குட்கா ஊழல் ஆவணங்கள், ஆதாரங்கள் மிகவும் திட்டமிட்டு சாமர்த்தியமாக அழிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. அரசு துறையின் நிர்வாகத்துக்குள் ஊடுருவி அந்த ஆதாரங்களை அழித்தது யாராக இருக்கும் என்பது புரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இது தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “குட்கா விற்பனை முறைகேடுகளில் அப்போதைய தலைமை செயலாளர் பெயரோ அல்லது அப்போதைய டி.ஜி.பி. பெயரோ இல்லை. அப்படி இருக்கும் போது அவர்களிடம் சென்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது” என்று கூறினார்.

    குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்கள் கொடுக்கப்பட்டு விட்டது என்று வருமான வரித்துறை மீண்டும் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து உண்மையை கண்டுபிடிக்க துறை ரீதியிலான விசாரணைக்கு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தற்போது அந்த விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை வெளியில் வருமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
    Next Story
    ×