search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்: லட்சுமிபுரம் கிராம மக்கள்
    X

    நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்: லட்சுமிபுரம் கிராம மக்கள்

    வேறு ஒருவருக்கு கிணற்றை விற்று விட்டு ஓ.பன்னீர்செல்வம் எங்களை ஏமாற்றி விட்டார் என்று லட்சுமிபுரம் கிராம மக்கள் ஆவேசமடைந்து உள்ளனர்.
    பெரியகுளம்:

    பெரியகுளம் லட்சுமிபுரம் கோம்பை அடிவாரப் பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செலவத்துக்கு சொந்தமான ராட்சத கிணறு உள்ளது. இந்த கிணறு தோண்டியதால் அருகில் உள்ள லட்சுமிபுரத்தில் குடிநீர் ஆதாரம் அடியோடு பாதிக்கப்பட்டதாக கூறி அந்த கிராமத்தினர் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தினர்.

    அதோடு கிணற்றை தானமாக வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் பிரச்சினை தீரவில்லை. எனினும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் போது பொதுமக்கள் கிணற்று தண்ணீரை 3 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது, இல்லையென்றால் மொத்த நிலமான 40 ஏக்கருடன் கிணற்றையும் விலைக்கு வாங்குவது என பேசப்பட்டது.

    அப்போது கிராம பொதுமக்கள் அனைவரும் ஒரு குடும்பத்தினருக்கு ரூ.20 ஆயிரம் என்று போட்டு 40 ஏக்கர் நிலத்துக்கு பணத்தை கொடுத்து கிணற்றையும் வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

    இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கிணறு மற்றும் நிலத்தை இலவசமாக வழங்க தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனால் அந்த பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    எனினும் இது குறித்து கிராம கமிட்டியில் முடிவு செய்யப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்படி நேற்று இரவு 40 ஏக்கர் நிலம் மற்றும் கிணற்றை விலைக்கு வாங்குவது குறித்து கிராம கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.

    அப்போது கிராம தலைவர் ரவிக்குமார் பேசுகையில் பிரச்சினைக்குரிய கிணறு உள்ள இடத்தை ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி பெயரில் இருந்து சுப்புராஜ் என்பவருக்கு கடந்த 12-ந் தேதியே விற்று விட்டார். இதற்கு ஆதாரமாக வில்லங்கச் சான்று உள்ளது என்று தெரிவித்தார்.

    இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதாவது 13-ந் தேதி நடந்த கூட்டத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் நிலத்தை கிராம மக்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கொடுப்பதாக கூறியது ஏமாற்று வேலையா? என்று மக்கள் ஆவேசப்பட்டனர். அப்போது அங்கிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பெருமாள் என்பவர் கிராம பெண்களை தரக்குறைவாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பெருமாள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



    இது குறித்து கிராமத்தினர் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம் தனது கிணற்றினை எங்களுக்கு தருவதாக கூறினார். ஆனால் வேறு ஒருவருக்கு விற்று விட்டு தற்போது எங்களை ஏமாற்றி விட்டார். கிணறு உள்ள நிலத்தை எங்களுக்கு விற்காமல் வேறு நபருக்கு விற்றதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
    Next Story
    ×