search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயிதே மில்லத் மாணவிகள் 105 பேருக்கு வாந்தி-மயக்கம்: அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதி
    X

    காயிதே மில்லத் மாணவிகள் 105 பேருக்கு வாந்தி-மயக்கம்: அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதி

    பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்ட காயிதே மில்லத் கல்லூரி விடுதி மாணவிகள் 105 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை ஸ்பென்சர் அருகே காயிதேமில்லத் அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படிக்கிறார்கள். நேற்று இரவு விடுதியில் மாணவிகளுக்கு இட்லி, குருமா வழங்கப்பட்டது. அப்போது ஒரு மாணவி சாப்பிட்ட போது உணவில் பல்லி செத்து கிடந்ததை பார்த்து திடுக்கிட்டார்.

    அதற்குள் பெரும்பாலான மாணவிகள் சாப்பிட்டு முடித்து இருந்தனர். சிறிது நேரத்தில் பலர் வயிற்று வலி, வயிற்று போக்கு, தலை சுற்றல், வாந்தி ஏற்பட்டு துடித்தனர்.

    ஒருவர் பின் ஒருவராக பலர் கீழே சாய்ந்து துடித்தனர். உடனடியாக 48 மாணவிகளை அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களை ரத்தக் கட்டி பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் அனுமதித்து உடனடியாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    57 மாணவிகள் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் 105 மாணவிகள் பாதிக்கப்பட்டதால் கூடுதல் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு துரிதமாக சிகிச்சை அளித்தனர்.

    பெரும்பாலான மாணவிகள் இரவு உடையிலேயே இருந்தனர். பலர் பயந்தபடி காணப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் இரவோடு இரவாக மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு படையெடுத்தனர்.

    சிகிச்சைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் இரவு முழுவதும் மருத்துவ மனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    ராயப்பேட்டை ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் ஆனந்த் பிரதாப் கூறியதாவது:-

    உணவு வி‌ஷமானதால்தான் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வந்தவர்களில் 4 பேர் மட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் எந்த பாதிப்பும் இல்லை.

    நான்கைந்து பேர் மயங்கி விழுந்ததால் பலர் பயத்தாலேயே பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனைவரது உடல்நிலையும் பரிசோதித்து விட்டோம். யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. இன்று அனைவரும் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்கள் என்றார்.

    உணவில் பல்லி விழுந்தது எப்படி? சமையலாளர்கள் கவனக்குறைவாக இருந்தார்களா? என்பது பற்றி கல்லூரி நிர்வாகம் விடுதியில் விசாரணை நடத்தி வருகிறது.

    Next Story
    ×