search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை காங். அரசை கலைக்க கவர்னர் முயற்சி: கி.வீரமணி குற்றச்சாட்டு
    X

    புதுவை காங். அரசை கலைக்க கவர்னர் முயற்சி: கி.வீரமணி குற்றச்சாட்டு

    கொல்லைப்புறமாக நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து புதுவை காங்கிரஸ் அரசை கலைக்க கவர்னர் முயற்சித்து வருவதாக தி.க. தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை திராவிடர் கழகம் சார்பில் சுதேசி மில் அருகே சமூக நீதி மாநாடு நடந்தது.

    மாநாட்டிற்கு புதுவை மாநில தி.க.தலைவர் சிவ.வீரமணி தலைமை தாங்கினார். மண்டல செயலாளர்கள் அறிவழகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநாட்டில் தி.க.தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    நீட் தேர்வில் இருந்து தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தின. ஆனால், நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தமிழக மற்றும் புதுவை மாணவர்களால் அதிக அளவில் தேர்ச்சி பெற முடியவில்லை. இதற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான கேள்வி கேட்கப்பட்டது தான் காரணம்.

    இந்த நிலையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அடுத்த ஆண்டு முதல் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். எனவே தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வு செல்லாது என அறிவித்து விட்டு ஒரே மாதிரியான வினாத்தாள்களை கொண்டு மறுதேர்வு நடத்த வேண்டும்.


    புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசும், கவர்னர் கிரண்பேடியும் கொல்லைப்புறமாக நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து இந்த ஆட்சியை கலைக்க முயற்சித்து வருகிறார்கள்.

    அவர்களுடைய திட்டம் பலிக்காது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் உதவியாக இருக்க வேண்டும். அதைவிட்டு போட்டி அரசாங்கம் நடத்தக் கூடாது. இந்த போட்டி அரசாங்கத்தால் அரசு அதிகாரிகள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும். அதற்கு மக்கள் துணை நிற்பார்கள், தமிழகமும் உங்களுக்கு துணை நிற்கும்.

    இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

    மாநாட்டில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் (சென்னை), இள.புகழேந்தி, சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அருணன், புதுவை இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலார் விசுவநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., மாநில மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம், மனிதநேய மக்கள் கட்சி புதுவை தலைவர் பஷீர் அகமது ஆகியோர் பங்கேற்றனர்.
    Next Story
    ×