search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகசியமாக செல்போனில் படம் பிடித்து சசிகலா வீடியோவை விற்கும் ‘சிறை’ கைதிகள்
    X

    ரகசியமாக செல்போனில் படம் பிடித்து சசிகலா வீடியோவை விற்கும் ‘சிறை’ கைதிகள்

    ரகசியமாக செல்போனில் படம் பிடித்து சசிகலா வீடியோவை விற்கும் ‘சிறை’ கைதிகள், வீடியோவின் விலை ரூ.10 லட்சமாம்.

    சென்னை:

    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக் ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 13-ம் தேதி சிறைத் துறை டி.ஐ.ஜி. ரூபா மாநில உள்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், “சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் ரூ.2 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளனர்” என்றும் குற்றம் சாட்டினார்.

    இந்த குற்றச்சாட்டு கடிதம், கன்னட டிவி சேனலில் அன்று இரவே வெளியாகி நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. மீடியாக்களுக்கு வி‌ஷயம் கசிந்ததை வைத்து ரூபா மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீசுக்கு பதிலளிக்கும் முன்பே, அவர் போக்கு வரத்துதுறை கமிஷ்னராக நியமிக்கப்பட்டார்.

    இதனிடையே கடந்த 17-ம் தேதி சசிகலாவின் சிறை அறைகளின் புகைப்படங்கள், சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரஜா டிவியில் காட்டப்பட்டது. அவை கர்நாடக, தமிழக அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வீடியோக்கள் என்பதால் சில அரசியல் கட்சிகளும் பேரத்தில் இறங்கியுள்ளன.

    சிறையில் சசிகலா சீருடை அணியாமல் நைட்டி அணிந்துகொண்டு நடமாடும் காட்சிகள் பதிவாகிய 2 நிமிட வீடியோவை ரூ.2 லட்சம் கொடுத்து ஒரு கன்னட சேனல் வாங்கி ஒளிபரப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    பெங்களூர் சிறையில் இருக்கும் முக்கிய தாதாக்கள், அவர்களின் அடியாட்கள் நடுவே கோஷ்டி பூசல் உள்ளது. எதிர்தரப்புக்கு சிறை அதிகாரிகள் கரிசனம் காட்டும்போதெல்லாம், எதிர்தரப்பு அதற்கான ஆதாரங்களை திரட்டும். அப்படி திரட்டிய வீடியோ காட்சிகள்தான் இவை.

    சிறையிலுள்ள ஒரு தாதாவின் அடியாட்களிடம் வீடியோ இருப்பதை அறிந்த சில ஊடகங்கள் அவரிடம் பேரம் பேசியுள்ளன. ஒரு தனியார் சேனல் ரூ.5 லட்சம் கொடுத்து வீடியோவை வாங்கியபோது அவர் கேரியரை உள்ளே கொண்டு செல்லும் காட்சிகள் இருந்தன.

    அதேபோல 5 நிமிடங்கள் ஓடும் ஒரு வீடியோவில் சசிகலா மற்றும் இளவரசி ஷாப்பிங் செல்லும் காட்சிகள் வெளியாகின. அந்த வீடியோவுக்கு விலை ரூ.10 லட்சமாம்.

    சசிகலா வீடியோவுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால், சிறையிலுள்ள ரவுடிகளுக்கு அவர்களின் தாதாக்கள் ஒரு உத்தரவை பிறப் பித்துள்ளனராம்.

    அதன்படி சசிகலா, இளவரசி தொடர்பான காட்சிகளை செல்போனில் சுட்டுத் தள்ளுங்கள். இப்போது, இதுதான் வருமானம் கொழிக்கும் தொழில் என்பதுதான் அந்த உத்தரவாம். எனவே இனிமேல் சசிகலா சிறைக்குள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று கூறுகிறார்கள்.

    Next Story
    ×