search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விருந்தினர் மாளிகையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் ஒன்றிரண்டு ஆண்டுகள் விலக்கு அளிக்கலாம். இல்லையெனில் தமிழகத்தில் மாநில கல்வி திட்டத்தில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம். இதுகுறித்து ஏற்கனவே மத்திய மந்திரியிடம் பேசி இருக்கிறேன்.

    ஆனால் தமிழக சட்டசபையில் நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி, வருகிற 27-ந் தேதி தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டம், மக்களை ஏமாற்றும் போராட்டம் ஆகும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, தரம் உயர்வாக இருந்தது. ஆனால் தற்போது கல்வியில் வளர்ச்சி இல்லை.

    நீட் தேர்வு பிரச்சினையில் தி.மு.க.வினர் அரசியல் ஆதாயம் தேட பார்க்கின்றனர்.

    தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை அமைப்பது தொடர்பாக கடந்த 17-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். அவர் முதல் முறையாக இதற்கு சாதகமான பதிலை தெரிவித்து உள்ளார். இந்த திட்டத்திற்கு மாநில சாலைகளை மத்திய அரசிடம் ஒப்படைப்பதாக கூறி உள்ளனர். இதில் சாலை போக்குவரத்து மட்டுமின்றி, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் புதிய ரெயில் பாதை மற்றும் கடலில் நீர்வழி போக்குவரத்து ஆகியவை தொடங்க பரிசீலிக்கப்படும்.

    இந்த திட்டங்களுக்கு 2 ஆண்டுகளில் தெளிவு பிறக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×