search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் 1837 கன அடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் 1837 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று 1605 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 1,837 கன அடியாக உயர்ந்தது.

    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    அந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் கடந்த மாதம் 30-ந் தேதி 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 15-ந் தேதி 3,501 கன அடியாக உயர்ந்தது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் 16-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிய தொடங்கியது.நேற்று மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1,605 கன அடியாக குறைந்தது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் தென் மாவட்ட பகுதிகளான குடகு, சிவமெக்கா, சிக்க மகளூரு, தட்சிணகன்னடா, மைசூரு, மாண்டியா பகுதிகளில் தற்போது தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.

    மேலும் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா தலைக்காவிரியில் கன மழை பெய்து வருவதால் காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 15 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருவதால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.65 அடி உயர்ந்து 81.20 அடியானது. அணையில் இருந்து 1,546 கன அடி தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.

    இதே போல கபினி அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 17 ஆயிரத்து 500 கன அடிக்கும் மேல் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 1500 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டுள்ளது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று 1605 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 1,837 கன அடியாக உயர்ந்தது. கர்நாடகாவில் மீண்டும் கன மழை பெய்வதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று 25.58 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று சற்று உயர்ந்து 25.72 அடியாக உயர்ந்தது.இனி வரும் நாட்களிலும் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    Next Story
    ×