search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டிய அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கைது
    X

    கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டிய அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கைது

    கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    தஞ்சை நெடுவாசல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலம் ஆகிய இடங்களில் எரிவாயு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர் போராடி வருகிறார்கள்.

    கதிராமங்கலத்தில் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. இதற்கிடையே கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக மற்ற இடங்களுக்கும் போராட்டம் பரவி வருகிறது. இதையடுத்து போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    கடந்த வாரம் மாணவி வளர்மதி சேலத்தில் கைது செய்யப்பட்டார். இவர் நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பி வந்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வளர்மதி மீது மேலும் பல வழக்குகள் உள்ளதால் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    வளர்மதியைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆராய்ச்சி படிப்பு மாணவர் குபேரன் (வயது 32) நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் தனது முகநூல் பக்கத்தில் நெடுவாசல், கதிராமங்கலம் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

    அதில் “கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தனது திட்ட பணிகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அங்கு போலீஸ் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போராடுபவர்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இனிவரும் காலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்ககூடாது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடி போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

    கைதான மாணவர் குபேரன், பி. மணியரசன் தலைமையிலான ‘தமிழ் தேசிய பேரியக்கம்’ என்ற அமைப்பில் தீவிர உறுப்பினராக உள்ளார். குபேரன் கைதுக்கு மணியரசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    மணியரசன் மேலும் கூறுகையில், அரசியல் சட்ட பிரிவு 19 அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் அளிக்கிறது. மக்கள் ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாக கூடவும் அனுமதிக்கிறது. ஆனால் தமிழக அரசு எங்களது இந்த உரிமையை பறிக்கிறது. இந்த ஜனநாயக விரோத செயலை கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×