search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

    பூலாப்பட்டி பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டியில் மதுக்கடை இயங்கி வந்தது. கோர்ட்டு உத்தரவின்பேரில் இந்த மதுக்கடை மூடப்பட்டது. மூடப்பட்ட கடையை காரிமங்கலம் அருகே உள்ள பூலாப்பட்டி பகுதியில் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. கடைக்கு தேவையான மதுபாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் நேற்று முன்தினம் இரவு கொண்டு வந்து இருப்பு வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் பூலாப்பட்டியில் மதுக்கடை திறப்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று பூலாப்பட்டியில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு திரண்டனர்.

    அப்போது பொதுமக்கள் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் மதுக்கடை முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது இந்த பகுதியில் மதுக்கடையை திறக்க கூடாது என்று பெண்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×