search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர்-முதல்-அமைச்சரை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    கவர்னர்-முதல்-அமைச்சரை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு முட்டுக்கட்டை போடும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    முதியோர்- விதவைக்கு உதவித் தொகை வேண்டி விண்ணப்பம் செய்த தகுதியான 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி தொகை வழங்காத புதுவை காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசை கண்டித்தும், உடனடியாக விண்ணப்பம் செய்த தகுதியானவர்களுக்கு உதவி தொகை வழங்க வலியுறுத்தியும், பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு முட்டுக்கட்டை போடும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும், அ.தி.மு.க. சார்பில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டுத்துறை அலுவலகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுவையை ஆளும் காங்கிரஸ், தி.மு.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது. ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகியும், வாக்களித்த மக்களுக்கு எந்தவொரு புதிய திட்டத்தையும் அரசு கொண்டு வரவில்லை.

    ஏற்கனவே நடை முறையில் உள்ள முதியோர்- விதவை உதவி தொகை, மீனவர் உதவி தொகை, குடிசைமாற்று வாரியத்தில் வீடு கட்ட மானிய உதவி போன்ற எந்தவொரு திட்டத்திலும் புதிய பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கவில்லை.

    சமூக நலத்துறை அமைச்சர் 10 ஆயிரம் பேருக்கு உடனடியாக நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், அமைச்சரின் அறிவிப்புக்கு இன்று வரை அரசாணை வழங்கப்படவில்லை. அதை கவர்னர் அலுவலகத்தில் உள்ள கவர்னர் தடுத்து கொண்டு இருக்கிறார். ஆக, ஒட்டு மொத்தத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும், கவர்னரும் போட்டி போட்டுக் கொண்டு மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ளனர்.

    மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை நாராயணசாமி செய்துள்ளார்.

    ஆண்டு தோறும் நிகர் நிலை பல்கலைக்கழகத்திடம் இருந்து 137 சீட்டை பெற்று தந்த ரங்கசாமியை குறை சொல்ல நாராயணசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. நாராயணசாமிக்கு ஆட்சி தோல்வி பயம் வந்து விட்டது.

    இன்னமும் சொல்கிறோம். இன்னும் வெகு விரைவில் புதுவையில் ஆட்சி மாற்றம் வரும். ரங்கசாமி தலைமையில் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி நிச்சயம் வரும். தன் கட்சி எம்.எல்.ஏ.க்களை முதல்- அமைச்சர் நாராயணசாமி பாதுகாத்து கொள்ளட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் பன்னீர்செல்வி, சாரம் கணேசன், நாகமணி, அண்ணா தொழிற்சங்கம் பாப்புசாமி, மீனவரணி ஞானவேலு, எம்.ஜி.ஆர். மன்றம் சுப்பிரமணி, தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், மணவாளன், சக்கர வர்த்தி, பொன்னுசாமி, கலியபெருமாள், ஜானி பாய், தமிழ்செல்வன், சிவக்குமார், முன்னாள் தொகுதி செயலாளர் அன்பழக உடையார், மகளிரணி விமலா, ஞான சவுந்தரி, ஆரோக்கியமேரி மற்றும் பி.கே.ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×