search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. போராட்டத்தில் விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்கும்: திருமாவளவன், முத்தரசன் அறிவிப்பு
    X

    தி.மு.க. போராட்டத்தில் விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்கும்: திருமாவளவன், முத்தரசன் அறிவிப்பு

    நீட் நுழைவு தேர்வுக்கு விலக்கு கேட்டு தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்கும் என திருமாவளவன், முத்தரசன் அறிவித்துள்ளனர்.
    சென்னை:

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவு தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வருகிற 27-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது.

    மாணவர்கள் நலனுக்காக நடக்கும் இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீட் நுழைவு தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்கிறது. மாவட்ட தலைநகரங்களில் திரளாகப் பங்கேற்று இந்த போராட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளது. உடனடியாக அந்த மசோதாக்களுக்கு ஒப்புதலை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ஜனதா அரசு தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் விதமாக இதில் மெத்தனம் காட்டி வருகிறது.

    தி.மு.க.வின் அழைப்பை ஏற்று 27-ந்தேதி கடலூரில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. இதில் பா.ஜனதா அரசுக்கு அழுத்தம் கொடுக்க கிடைத்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பை காப்பாற்ற மாநில அரசு தவறிவிட்டது.

    நீட் தேர்விற்கு விதிவிலக்கு கோரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கோரி தி.மு.க. நடத்தும் அறவழி போராட்டமான மனித சங்கிலியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்கும்.

    தமிழக மாணவர்கள் நலன் கருதி நடக்கும் இந்த போராட்டத்தில் கட்சி தொண்டர்கள், பொது மக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் பங்கேற்று மனித சங்கிலி போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×