search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
    X

    சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    தமிழகம் முழுவதும் கோவில் சிலைகளை கடத்தியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், ‘மதுரையை சேர்ந்த சுந்தரமூர்த்தி, அருப்புக்கோட்டையை சேர்ந்த ஆரோக்கியராஜ் ஆகியோரிடம் இருந்து பழங்கால சாமி சிலைகளை, சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர்பாஷா பறிமுதல் செய்துள்ளார்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யாமல், அந்த சிலைகளை சர்வதேச சிலை கடத்தல் கும்பலிடம் பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளார். இதில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பலருக்கு தொடர்பு உள்ளது. இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த சிலை கடத்தல் வழக்கை இன்ஸ்பெக்டர் ஒருவர் விசாரிக்கிறார். ஆனால், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட காதர்பாஷா தற்போது துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். எனவே, இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் ஒருவர் விசாரித்தால் சரியாக இருக்காது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவேண்டும். சி.பி.சி.ஐ.டி. பிரிவில் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரியை கொண்டு புலன் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். அப்போது, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் ஆஜராகி, துணை போலீஸ் சூப்பிரண்டு காதர்பாஷாவை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், இந்த சிலைக்கடத்தல் குறித்த வழக்கை சட்டப்படி விசாரித்து வருவதாகவும் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஆர்.மகாதேவன் இன்று பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    இந்த சிலைக்கடத்தல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை என்று முடிவு செய்கிறேன். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமிக்கிறேன்.

    அவர், இந்த வழக்குகளை விசாரிக்க திருச்சியில் தலைமையிடமாக கொண்ட ஒரு (கேம்ப்) அலுவலகத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். மனுதாரர் குறிப்பிட்டது மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் கோவில் சிலைகளை கடத்தியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் விசாரிக்க வேண்டும்.

    இந்த சிலைக் கடத்தல் வழக்கை விசாரிப்பதற்காக கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை சிறப்பு கோர்ட்டாக அறிவிக்கிறேன். அந்த கோர்ட்டில் தான் இந்த சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கப்பட வேண்டும்.

    இந்த சிலைக்கடத்தல் வழக்குகளின் போலீஸ் புலன் விசாரணையை இந்த ஐகோர்ட்டு கண்காணிக்கும். அந்த விசாரணை தொடர்பான அறிக்கையை இந்த கோர்ட்டில் அவ்வப்போது, ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 4ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், தன்னுடைய புலன் விசாரணை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
    Next Story
    ×