search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவரத்திலிருந்து துறைமுகம் செல்ல 11 இடங்களில் போலீசாருக்கு ‘கப்பம்’
    X

    மாதவரத்திலிருந்து துறைமுகம் செல்ல 11 இடங்களில் போலீசாருக்கு ‘கப்பம்’

    மாதவரத்திலிருந்து துறைமுகம் செல்லும் இடைப்பட்ட 18 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 11 இடங்களில் போலீசாருக்கு கப்பம் கட்டுவதாக கண்டெய்னர் லாரி டிரைவர்கள் கூறினர்.
    சென்னை:

    வெளிமாநிலங்களில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வரும் கண்டெய்னர் லாரிகள் மாதவரம் வழியாக துறைமுகத்தை அடைகின்றன.

    மொத்தம் 18 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த பாதையில் 500-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் ரோட்டோரமாக நின்று கொண்டிருக்கும். வெளியூர் லாரி டிரைவர்கள் லாரியின் அருகிலேயே சப்பாத்தி போட்டு சாப்பிட்டு பரிதாபமாக காத்து கிடக்கிறார்கள்.

    வெளி மாநிலங்களில் இருந்து 2 நாட்களில் சென்னை வந்து விடுவதாகவும், மீஞ்சூரில் இருந்து துறைமுகத்துக்கு செல்ல 4 நாட்கள் வரை ஆகிறது என்றும் டிரைவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    தூக்கம் கெட்டு ரோட்டோரத்தில் காத்து கிடக்கும் டிரைவர்களை கூட போலீசார் விட்டு வைப்பதில்லை என்பது வேதனையானது.

    எண்ணூர் விரைவு சாலை சாதிகுப்பம் அருகே பணியில் இருந்த ஏட்டு ஒருவர் கண்டெய்னர் லாரியை மடக்கி பணம் கேட்டுள்ளார். இதனால் அந்த போலீஸ் ஏட்டுக்கும் கண்டெய்னர் லாரி டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கண்டெய்னர் லாரி டிரைவர் அந்த ஏட்டு அமர்ந்து இருந்த பைக் மீது லாரியை மோதி இருக்கிறார்.

    இதனால் படுகாயம் அடைந்த போலீஸ் ஏட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக செங்குன்றத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமு (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதுபற்றி அந்த பகுதியில் நின்ற லாரி டிரைவர்கள் கூறும்போது, ராமு மட்டுமல்ல எல்லா டிரைவர்களுமே ஆத்திரத்தில்தான் இருக்கிறோம்.

    துறைமுகத்தில் இருந்து மாதவரம் செல்லும் வழியில் காசிமேடு, ராயபுரம், மணலி, எண்ணூர், திருவொற்றியூர், மணலி சாத்தங்காடு என பல போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    இந்த 18 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 11 இடங்களில் போலீசாருக்கு கப்பம் கட்டுகிறார்கள். ரூ.50 முதல் 100 வரை வாங்கி விட்டுத்தான் லாரியை விடுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி லாரியை ஓரம் கட்டி விடுகிறார்கள். வேறு வழியில்லாமல் நாங்களும் கப்பம் கட்டி விடுகிறோம் என்றனர்.

    எண்ணூரில் இருந்து துறைமுகம் வரை 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டும் 4 வழிச்சாலை உள்ளது. இதில் கண்டெய்னர் லாரி செல்ல ஒரு பாதை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையை மீறி விரைவாக செல்வதற்காக இலகு ரக வாகனங்கள் செல்லும் பாதையில் செல்வதற்குத்தான் இந்த சீர்வரிசை அதிகமாம்.

    கொஞ்சம் அதிகமாக போலீசாரை கவனித்தால் மற்ற பாதையில் அனுப்பி விடுகிறார்கள். காத்துக் கிடப்பதை விட கப்பத்தை கட்டிவிட்டு விரைவாக சென்று விடலாம் என்று டிரைவர்களும் கேட்டதை கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போலீசார் லஞ்சம் கேட்டு துன்புறுத்துவதாக கூறி கண்டெய்னர் லாரி டிரைவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.

    கடந்த 2012-ம் ஆண்டு இதேபோல் ஏற்பட்ட ஆத்திரத்தில் கண்டெய்னர் லாரியை ஏற்றி பணியில் இருந்த சந்தன மாரியப்பன் என்ற போலீஸ்காரரை கொலை செய்தனர்.

    லஞ்சம் வாங்குவதால் போலீசாருக்கும், கண்டெய்னர் லாரி டிரைவர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருவது ஒரு தொடர்கதை தான்.

    ஆனால் இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, கண்டெய்னர் லாரி டிரைவர்கள் தங்கள் தவறுகளை மறைக்க எங்கள் மீது பழி போடுகிறார்கள். விதிமுறைகளை சரியாக பின்பற்றி செல்லுபவர்கள் போலீசாரை குற்றம் சொல்ல மாட்டார்கள் என்றனர்.

    இந்த கருத்து சரிதானா? விதிமுறைகளை மீறி செல்வதை கண்காணிப்பதும் தடுப்பதும் தானே உங்கள் பணி. அதுமுறையாக இருந்தால் குறை ஒன்றும் வராதே?

    Next Story
    ×