search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரம் பிரிக்காத குப்பையை கொடுத்தால் பொதுமக்களுக்கு ரூ.10 அபராதம்: திருவள்ளூர் நகராட்சி அறிவிப்பு
    X

    தரம் பிரிக்காத குப்பையை கொடுத்தால் பொதுமக்களுக்கு ரூ.10 அபராதம்: திருவள்ளூர் நகராட்சி அறிவிப்பு

    மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்காமல் குப்பையை கொடுத்தால் பொதுமக்களுக்கு ரூ.10 அபராதம் விதிக்கப்படும் என்று திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் தெரிவித்து உள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகளில் 450 தெருக்கள் உள்ளன. தினமும், 26 டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில், 60 சதவீதம் மக்காத குப்பையும், 40 சதவீதம் மக்கும் கழிவுகளும் கிடைப்பதால், குப்பையை உரமாக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, நுங்கம்பாக்கம் கிராமத்தில் உரக்கிடங்கு அமைக்கும் பணியை, நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.

    இதற்கு முன்னோட்டமாக, மக்காத கழிவை தரம் பிரித்து, பொதுமக்களிடம் இருந்து பெறும் திட்டம், நேற்று முதல், நகராட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையில், பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கழிவுகளை மட்டும் தரம் பிரித்து வைத்திருக்க வேண்டும்.

    பொதுமக்கள் வீடுகளுக்கு, புதன்கிழமை தோறும் வரும் துப்புரவு பணியாளர்களிடம் பிளாஸ்டிக், இரும்பு கழிவுகளாக மக்காத குப்பையை வழங்க வேண்டும். தரம் பிரிக்காத குப்பையை பொதுமக்கள் வழங்கினால், ரூ. 10 அபராதம் விதிக்கவும் நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

    வார்டுகளில் உள்ள, 37 துப்புரவு ஊழியர்கள், 37 தள்ளுவண்டிகள் மூலம், வீடு, வீடாகச் சென்று தரம் பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவை பெற்றுச் செல்வர்.

    சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பை, நகராட்சி நிர்வாகம் ஒதுக்கிய ஐந்து இடங்களில் சேர்க்கப்படும். அங்கு, காயலான் கடை வியாபாரிகளை வரவழைத்து, மறு சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் குப்பை விற்பனை செய்யப்படும்.

    விற்பனையாகும் பணம் துப்புரவு ஊழியருக்கே வழங்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

    பொதுமக்கள் துப்புரவு ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து, திருவள்ளூர் நகரை தூய்மையான நகரமாக மாற்ற முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×