search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்: என்.ஆர்.ஐ. இடங்கள் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கீடு - நாராயணசாமி
    X

    எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்: என்.ஆர்.ஐ. இடங்கள் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கீடு - நாராயணசாமி

    அரசு மருத்துவக் கல்லூரியில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் புதுவை மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் வறட்சி நிலவும் காரணத்தால் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தபடி வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறுகிய காலத்தில் இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    புதுவை, காரைக்காலில் பாதித்த விவசாயிகள் இதன்மூலம் பயன்பெறுவர். 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியமைத்து 150 நாட்களாக உயர்த்தி விவசாய தொழிலாளர்கள் பயனடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஏழை விவசாயிகள், ஆதிதிராவிட விவசாயிகளையம் இத்திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளம், ஏரி தூர்வாருதல், விளையாட்டு மைதானம் அமைத்தல், கோவில் சுத்தப்படுத்தும் பணிகளையும் சேர்க்க முடிவு செய்துள்ளோம்.

    எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங் இந்த வாரம் தொடங்கவுள்ளது. சென்டாக் குழு விண்ணப்பங்களை தரம் பிரித்து தகுதி அடிப்படையில் பட்டியலை வெளியிடும் பணிகளை தொடங்கியுள்ளது.

    கடந்த ஆண்டு நிகர்நிலை பல்கலைக்கழங்கள் அரசு ஒதுக்கீடுக்கு இடங்கள் அளித்தது. ஆனால் இந்த ஆண்டு நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் அரசு ஒதுக்கீடு இடங்கள் கிடைக்காது.

    புதுவையில் உள்ள 4 நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் 137 இடங்களை கடந்த ஆண்டு பெற்றோம். தற்போது அந்த இடங்களை மத்திய அரசே தகுதியின் அடிப்படையில் அகில இந்திய அளவில் நிரப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் புதுவை அரசு 137 இடங்களை இழக்கும் நிலை உள்ளது. எம்.பி.பி.எஸ். சேர்க்கை தொடர்பாக மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் சுயநிதி கல்லூரிகள், சிறுபான்மை மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசுக்கு செல்கிறது. எஞ்சிய 85 சதவீதத்தில் மாநில மாணவர்கள், நிர்வாக இடங்களாக கொடுக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேசி சுயநிதி, சிறுபான்மை கல்லூரிகளில் 25 சதவீத இடங்களை புதுவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளேன். மத்திய மந்திரியிடமும் போனில் பேசியுள்ளேன். இதனால் அரசு ஒதுக்கீடாக ஏற்கனவே பெற்ற இடங்களை இந்த ஆண்டும் பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுவை மாநிலத்தில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், இருக்கும் மருத்துவ இடங்கள் குறைவாக உள்ளது. எனவே, அரசு மருத்துவ கல்லூரியில் 22 இடங்கள் என்.ஆர்.ஐ. ஒதுக்கீடாக ஒதுக்கிய இடங்களை புதுவை மாணவர்களுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    பிராந்திய இடஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட்டில் ஒரு தீர்ப்பு உள்ளது. அதற்கு மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத்துறையிடம் பேசி முடிவெடுப்போம். இலவச அரிசி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவர்னருக்கு புதுவையில் எங்கும் செல்ல அதிகாரம் உண்டு. அதனால்தான் அவரை யாரும் தடுக்க வேண்டாம் என்று கூறினேன்.

    சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியாமல் கவர்னர் தொகுதிக்கு வந்தால் எதிர்ப்பு தெரிவிக்கும் படிதான் கூறியிருந்தேன். ஆனால் விதிமுறைகளுக்கு மாறாக கவர்னரோ, அமைச்சரோ செயல்பட்டால் அதை தட்டிக்கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது. அவரவர் அதிகார எல்லைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் உடனிருந்தார்.
    Next Story
    ×