search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் சாட்சியம் அளிக்க ஐகோர்ட்டில் தனி நீதிமன்ற அறை
    X

    பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் சாட்சியம் அளிக்க ஐகோர்ட்டில் தனி நீதிமன்ற அறை

    பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் சாட்சியம் அளிக்க தனி நீதிமன்ற அறையை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி திறந்து வைத்தார்.
    சென்னை:

    18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்கள் மீது பாலியல் தொந்தரவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (போஸ்கோ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்களில் தான், வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

    இந்த நீதிமன்ற அறைகள் சாதாரண நீதிமன்ற அறைகள் போல் இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடன் சாட்சியம் அளிக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே, எந்த வித அச்சமும் இல்லாமல் சாட்சியம் அளிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனி நீதிமன்ற அறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் கோர்ட்டு கட்டிடத்தில் தனி நீதிமன்ற அறை அமைக்கப்பட்டுள்ளது. இதை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நேற்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×