search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே நகைபட்டறை அதிபரை கத்திமுனையில் மிரட்டி 110 பவுன் நகைபறிப்பு
    X

    கோவை அருகே நகைபட்டறை அதிபரை கத்திமுனையில் மிரட்டி 110 பவுன் நகைபறிப்பு

    கோவை அருகே நகைபட்டறை அதிபரை கத்திமுனையில் மிரட்டி 110 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பேரூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் புதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 47). 15 வருடங்களாக டவுன் ஹால் பகுதியில் நகை பட்டறை நடத்தி வந்த இவர் கடந்த 5 வருடங்களாக வீட்டில் வைத்து நகை செய்து கொடுத்து வருகிறார்.

    ஊட்டியை சேர்ந்த நகைக் கடை அதிபர் ஒருவர் இவரிடம் தங்க கட்டியை கொடுத்து வாடிக்கையாளர்கள் கேட்ட மாடல்களில் நகைகளாக செய்து வாங்குவது வழக்கம். அதன்படி சமீபத்தில் நகைக்கடை அதிபர் கொடுத்த தங்க கட்டியின் மூலம் செய்த 880 கிராம்(110 பவுன்) எடை கொண்ட 10 தங்க செயின்களை கொடுப்பதற்காக ஈஸ்வரன் நேற்று மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    கோவை சாய்பாபா கோவில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஊட்டிக்கு பஸ் ஏற காத்து நின்றார். அப்போது அவ் வழியாக வந்த கார் டிரைவர் ஒருவர் ஊட்டிக்கு சவாரி செல்வதாக கூறி அழைத்தார். உடனே ஈஸ்வரன் காரின் பின்சீட்டில் ஏறினார். காரில் 3 பேர் இருந்தனர்.

    கார் பிரஸ்காலனி பகுதியில் சென்ற போது 2 பேர் சிறுநீர் கழிக்க வேண்டும், காரை நிறுத்துங்கள் என்றனர். உடனே டிரைவர் காரை நிறுத்தினார். சிறிதுநேரம் கழித்து இருவரும் காருக்கு வந்தனர். அவர்கள் ஈஸ்வரனை நடுவில் உட்காருமாறு கூறினர். அதன்படி ஈஸ்வரன் அமர்ந்தார். பின்னர் கார் மீண்டும் புறப்பட்டு சென்றது.

    பெரியநாயக்பன்பாளையம் அ ருகே கோட்டை பிரிவில் இருந்து ஒன்னிப்பாளையம் செல்லும் சாலையில் கார் சென்ற போது திடீரென காரில் இருந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி ஈஸ்வரனை மிரட்டினர். சத்தம் போட்டால் குத்திக் கொன்று விடுவோம், உன்னிடம் இருக்கும் நகை, பணத்தை தந்து விடு என மிரட்டினார்.

    ஈஸ்வரன் என்னிடம் ரூ.900 மட்டும் இருக்கிறது என கூறி பணத்தை கொடுத்தார். ஆனால் அந்த கும்பல், நீ மறைத்து வைத்திருக்கும் நகையையும் தா, இல்லையென்றால் கொன்று விடுவோம் என மிரட்டினர். இதையடுத்து ஈஸ்வரன் தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த 10 தங்க செயின்களையும் எடுத்துக் கொடுத்தார்.

    அந்த கும்பல் ஈஸ்வரன் அணிந்திருந்த வாட்ச், வெள்ளி அரைஞான்கொடி மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரை இறக்கி விட்டு காரில் தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஈஸ்வரன் நீண்ட தூரம் நடந்து சென்றார். அவ்வழியாக சென்ற ஒருவரிடம் செல்போன் வாங்கி நடந்த சம்பவங்களை தனது குடும்பத்தினரிடம் கூறினார். அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஈஸ்வரனை மீட்டனர்.

    இது குறித்து ஈஸ்வரன் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்றதாக ஈஸ்வரன் கூறிய இடத்தில் இருந்து 1½ கிலோ மீட்டர் தொலைவில் ஒரு தனியார் நிறுவனத்தின் முன்பகுதியில் கண்காணிப்பு காமிரா இருந்தது. அதில் இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஈஸ்வரன் புகார் கூறிய கார் அவ்வழியாக சென்றது தெரிய வந்தது.

    காரில் வந்த கும்பல் யார்? ஈஸ்வரனிடம் நகைகள் இருப்பதை அறிந்தே இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதால் கொள்ளையர்கள் அவருக்கு அறிமுகமானவர்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×