search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.433 கோடி பினாமி சொத்து முடக்கம்: சேகர்ரெட்டி, முன்னாள் மத்திய மந்திரி உள்பட 66 பேருக்கு நோட்டீஸ்
    X

    ரூ.433 கோடி பினாமி சொத்து முடக்கம்: சேகர்ரெட்டி, முன்னாள் மத்திய மந்திரி உள்பட 66 பேருக்கு நோட்டீஸ்

    பினாமி சொத்து தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி, காண்டிராக்டர் சேகர்ரெட்டி உள்பட 66 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    சென்னை:

    கருப்பு பணம் பதுக்கல், வரிஏய்ப்பு போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு அடுத்து பினாமி சொத்துக்கள் மீது குறி வைத்துள்ளது.

    இதற்காக பினாமி சொத்துக்கள் பரிமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வந்துள்ளது.

    ஏற்கனவே உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பினாமி சொத்துக்களுக்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் பினாமி சொத்துக்களை கண்டறிந்து கைப்பற்றுவதில் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே நடந்த சோதனை தவிர சமீபத்தில் பினாமி சொத்துக்கள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் உள்ள நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது பினாமி சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    இதுதவிர முக்கிய பிரமுகர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் சோதனையின் போதும் பினாமி சொத்துக்கள் பற்றிய விவரங்கள் சிக்கியது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் பினாமி சொத்துக்கள் வைத்திருப்பவர்களின் பட்டியலை தயாரித்துள்ளது.

    முதல் கட்டமாக 66 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் ரூ. 433 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி, சமீபத்தில் வருமான வரித் துறையிடம் சிக்கிய காண்டிராக்டர் சேகர்ரெட்டி, நிதித்துறையில் தலைமை பொறுப்பு வகித்த முன்னாள் நீதிபதி ஆகியோர் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    கடந்த காலங்களில் பினாமி சொத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஒரு அதிகாரி மட்டுமே இருந்தார். தற்போது இதற்காக தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு 4 அதிகாரிகள், பல ஆய்வாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பினாமி சொத்துக்கள் பற்றிய தகவல் அளித்தால் அவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மத்திய அரசின் புதிய பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ. 433 கோடி சொத்து முடக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    பினாமி சொத்து கண்டு பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளர் மீதும் யார் பெயரில் பினாமி சொத்து உள்ளதோ அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கடந்த ஜூன் 30-ந் தேதி வரை கண்டுபிடிக்கப்பட்ட இவர்களது ரூ. 433 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

    சென்னை அண்ணா சாலையில் எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சந்திப்பில் உள்ள கட்டிடம் பினாமி பெயரில் உள்ளது. அதன் உரிமையாளருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை. மற்றவர்கள் நோட்டீசுக்கு விளக்கம் அளித்து வருகிறார்கள்.

    முடக்கப்பட்டுள்ள பினாமி சொத்துக்கள் மீது அதன் உரிமையாளருக்கு சொத்து மதிப்பில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்த தவறினால் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.

    காண்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதன் அடிப்படையில் ரூ. 102 கோடி பணம், 11 தங்ககட்டிகள் பினாமி சொத்துக்களாக கண்டு பிடிக்கப்பட்டன. இது அவரது டைரி மூலம் தெரிய வந்தது.

    முன்னாள் மத்திய மந்திரி ஒருவர் எரிசக்தி நிறுவனம் ஒன்றை பினாமி பெயரில் நடத்தி வந்தார். அந்த நிறுவனம் முடக்கி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

    இவ்வாறு வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×