search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை: எம்.எல்.ஏ. செம்மலை
    X

    அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை: எம்.எல்.ஏ. செம்மலை

    அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கான எந்த அறிகுறியும் தற்போது வரை தென்படவில்லை என்று செம்மலை எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    சேலம்:

    அ.தி.மு.க. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த செம்மலை எம்.எல்.ஏ.விடம் மாலைமலர் நிருபர் இன்று கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு-

    கேள்வி- சட்டசபையில் கேள்வி கேட்க உங்கள் அணி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறதே?

    பதில்- சட்டசபை கூட்டத்தில் எங்கள் அணி எம்.எல்.ஏ.க்களுக்கு கேள்வி கேட்க இதுவரை அனுமதி மறுக்கப்படவில்லை. தற்போது நடைபெறும் மானிய கோரிக்கையில் எங்கள் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. மானிய கோரிக்கையில் இனிவரும் நாட்களில் கேள்வி எழுப்புவோம், அப்போது தான் அனுமதிக்கப்படுகிறதா? என்பது தெரியும்.

    கேள்வி-அ.தி.மு.க.வில் இரு அணிகளும் இனி வரும் நாட்களில் இணைய வாய்ப்புள்ளதா?

    பதில்-இரு அணிகளின் இணைப்புக்கான எந்த அறிகுறியும் தற்போது வரை தென்பட வில்லை. கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்ப பிடியில் சென்று விட கூடாது என்ற எங்களது நிலைபாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

    கேள்வி-உங்கள் அணியினரின் எதிர்கால திட்டம் என்ன?

    பதில் - தொண்டர்களுக்காக கட்சியும், மக்களுக்காக ஆட்சியும் என்ற அடிப்படையில் தூய்மையான அரசு அமைய வேண்டும் என்பது தான் எங்களது எதிர்கால திட்டம். இந்த இயக்கம் தொண்டர்களின் இயக்கமாக தொடர வேண்டும், ஆட்சி மக்கள் விரும்புகிற வகையில் மக்களாட்சியாக இருக்க வேண்டும், எங்கள் அணி தலைமை ஏற்றால் அந்த நல்லாட்சியை கொடுப்போம்.

    கேள்வி- முன்னாள் அமைச்சர்கள் பாண்டியராஜன், சண்முகநாதன் உள்பட பலர் எடப்பாடி அணிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறதே?

    பதில்- எங்கள் அணியில் உள்ள அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் எங்கள் அணியில் தொடருவதில் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனர். தற்போது வரை எந்த தடுமாற்றமும் இல்லை. வேண்டும் என்றே சிலர் வதந்தி பரப்புகிறார்கள்.

    கேள்வி-எடப்பாடி அணிக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவு பெருகி உள்ளதாக கூறப்படுகிறதே?


    பதில்-எடப்பாடி அணிக்கு ஆதரவு பெருகி உள்ளது குறித்து உடனடியாக கணிக்க முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை.

    கேள்வி-உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பயந்தே எடப்பாடி அணி தேர்தலை தள்ளி வைப்பதாக அனைத்து கட்சியினரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்களே?

    அவர்களை பற்றி எந்த கருத்தும் சொல்ல முடியாது. 98 சதவீத கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எங்கள் அணியில் உள்ளதால் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் எங்கள் அணி அதனை சந்திக்க தயாராக உள்ளது.

    கேள்வி- தினகரன் மீதான வழக்குகளை விசாரிக்க சமீப காலமாக கோர்ட்டு தடை விதித்து வருகிறதே?

    பதில்- வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் நேரத்தில் கோர்ட் விதிக்கும் தடைகளுக்கு நான் எந்த விதமான பதிலும் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×