search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட முரளி
    X
    கொலையுண்ட முரளி

    பொன்னேரி அருகே தொழிலாளி குத்திக் கொலை: அண்ணன்கள் 3 பேருக்கு வெட்டு

    பொன்னேரி அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த சைனாவரத்தை சேர்ந்தவர் முரளி, தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    அதே பகுதியில் முரளியின் அண்ணன் ராமு வசித்து வருகிறார். அவரது வீட்டில் மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 7 வாலிபர்கள் வாடகைக்கு தங்கி இருந்தனர். சாப்பாடு சமைப்பதில் அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்தது.

    இதுபற்றி கேட்பதற்காக உடன் வேலை பார்க்கும் நண்பரான அரசூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் அங்கு வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சத்தம் கேட்டு வந்த ராமு அவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமுவை வெட்டினார். இதுபற்றி அறிந்ததும் ராமுவின் தம்பி முரளி, அண்ணன்கள் தனசேகர், லட்சுமணன் ஆகியோர் அங்கு வந்தனர்.

    அவர்களுக்கும் கண்ணன் தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் முரளியின் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. இதில் குடல் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தனசேகர், லட்சுமணனுக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் கொலையாளி கண்ணனை சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்தனர். உடனே வீட்டில் தங்கியிருந்த 7 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர்.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. (பொறுப்பு) துரைராஜ், பொன்னேரி இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கண்ணனை மீட்டு கைது செய்தனர். முரளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    காயம் அடைந்த ராமு, தனசேகர், லட்சுமணன் ஆகிய 3 பேருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சைனாவரம் பகுதி பொது மக்கள் தச்சூர் - பொன்னேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர்.

    தப்பி ஓடிய 7 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×