search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியமன எம்.எல்.ஏ.க்களை முன்கூட்டியே நியமிக்காதது ஏன்?: முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம்
    X

    நியமன எம்.எல்.ஏ.க்களை முன்கூட்டியே நியமிக்காதது ஏன்?: முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம்

    நியமன எம்.எல்.ஏ.க்களை முன்கூட்டியே நியமிக்காதது ஏன்? என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு முன் கூட்டியே நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து இருந்தால் இப்போது பாரதிய ஜனதா நிர்வாகிகளை நியமித்து இருக்க மாட்டார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது.

    இது சம்பந்தமாக முதல்- அமைச்சர் நாராயணசாமி நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் அந்த கூட்டத்தில் பேசியதாவது:-

    கவர்னர் கிரண்பேடி ஜூன் மாதம் புதுவை கவர்னராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதில் இருந்தே பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார்.

    இதனால் ஆகஸ்டு மாதம் நான் மத்திய அரசிடம் அவரை பற்றி புகார் கூறினேன். அவர்கள் கிரண்பேடியை மாற்றுவதாக தெரிவித்தார்கள். அதை நம்பி நான் காத்திருந்தேன். ஆனால், அவர்கள் சொன்னபடி மாற்றவில்லை.

    நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பதற்கு ஆரம்பத்தில் முடிவு செய்தோம். ஆனால், கட்சியில் கடும் போட்டி நிலவியது. இதுபற்றி கட்சி மேலிடத்திடம் கொண்டு சென்றபோது, கொஞ்ச நாட்கள் பொறுத்திருங்கள் என்று கூறினார்கள். எனவே, பொறுத்திருந்தோம்.



    மேலும் கவர்னரின் நடவடிக்கைகள் அரசுக்கு எதிராகவே தொடர்ந்து இருந்து கொண்டு இருந்தன. ஒருவேளை அவர் நியமன எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை தன்னிச்சையாக அனுப்பினாலும் அதை மத்திய அரசும் ஏற்றுக்கொள்ளாது. ஆளும் அரசிடம் எதுவும் கேட்காமல் முடிவெடுக்க மாட்டார்கள் என கருதினோம். ஆனால், அது வேறு மாதிரி ஆகிவிட்டது.

    இப்படி ஒரு நிலை வரும் என்று நாங்கள் நினைத்து பார்க்கவே இல்லை. கவர்னர் கிரண்பேடி புதுவை நலனுக்கு எதிராக செயல்படுகிறார். அவரை முறியடிக்க அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா, கம்யூனிஸ்டு நிர்வாகி நாரா.கலைநாதன் ஆகியோர் கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக இருந்தால் அதை உறுதியாக செய்ய வேண்டும். இப்படி ஆலோசனை நடத்துவதும், பின்னர் கண்டுகொள்ளாமல் விடுவதும் வாடிக்கையாக உள்ளது.

    மேலும் உங்களுக்கு பிரச்சினை என்றால் மட்டுமே கலந்தாலோசிக்கிறீர்கள். புதுவை நலன் வி‌ஷயத்தில் ஒருமித்த உணர்வோடு இருந்து முறியடிக்க நாங்கள் தயார். ஆளும் கட்சியும் இதற்கு தயாராகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.
    Next Story
    ×