search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்முட்டைக்காக வாத்தை அறுத்த கதை!: தலையங்கம்
    X

    பொன்முட்டைக்காக வாத்தை அறுத்த கதை!: தலையங்கம்

    தியேட்டர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி விதிப்பானது, பொன் முட்டையிடும் வாத்தை அறுத்த கதையை நினைவூட்டுகிறது.
    சென்னை:

    தியேட்டர்கள் மூடப்பட்டு வேலை நிறுத்தம் தொடங்கி இருக்கிறது. ஆயிரம் தியேட்டர்கள் மட்டும் மூடப்பட்டதால் என்ன நிகழ்ந்து விடப்போகிறது என்று நினைக்கலாம்.

    ஆனால் மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கும் முக்கியமானது. அந்த காலத்தில் கூத்துக்கலையாக இருந்து இன்று சினிமா கலையாக வளர்ந்து இருக்கிறது. நாள் முழுவதும் உழைத்து களைத்து போகும்போது கொஞ்ச நேரம் மனதை இலகுவாக்க பொழுதுபோக்கு அவசியமாகிறது. அதனால்தான் உழைப்புக்கு இணையாக பொழுதுபோக்குக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    தியேட்டர்களில் சென்று சினிமா பார்ப்பதற்கு டிக்கெட்டுகள் வாங்க வரிசையில் காத்து கிடந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது அந்த நிலை மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம் ஆன்-லைன் டிக்கெட் விற்பனையும் ஒன்று. அதைவிட முக்கியம் கட்டண உயர்வு என்பதை மறுக்க முடியாது.

    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, சின்னத்திரை ஆதிக்கத்தால் தியேட்டருக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் வீட்டுக்குள் இருந்து சினிமா பார்ப்பதற்கும் குடும்பத்தோடு தியேட்டரில் சென்று பார்த்து ரசித்து மகிழ்வதற்கும் வித்தியாசம் உண்டு. எனவே தியேட்டரில் சென்று படம் பார்க்கும் ஆசை பெரும்பாலானவர்களிடம் இருந்தாலும் பட்ஜெட்தான் அவர்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது.

    படம் சில நாட்கள் ஓடினாலும் பரவாயில்லை. அதற்குள் லாபத்தை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக டிக்கெட் கட்டணத்தை அதிகமாக உயர்த்தி விட்டனர். அதற்கு தியேட்டர் வகை, அதற்கான வரிகள் என்று பல காரணத்தை சொல்லலாம். ஆனால் முட்டையிடும் கோழிக்குத்தானே வலி தெரியும். பொன் முட்டையிடும் வாத்து என்பதற்காக அறுத்துவிட்டால்...?

    குடும்பத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றால் டிக்கெட் விலை ரூ.100-க்கு மேல், 5 ரூபாய் பாப்கான் 80 ரூபாய், ஒரு காபி 40 ரூபாய் என்று ஒவ்வொன்றின் கட்டணமும் தாறுமாறாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் இல்லாமல் படம் பார்க்க போகமுடியாது என்றாகிவிட்டது. அதனால்தான் தியேட்டருக்கு செல்லும் ஆர்வம் குறைந்தது.

    இதனால் பல தியேட்டர்கள் மூடப்படும் நிலையும் ஏற்பட்டது. ஏற்கனவே திருட்டு வீடியோவால் சினிமா தள்ளாடுகிறது. வரவர கூட்டம் குறைவால் தியேட்டர்களும் தடுமாறுகிறது.

    இந்த சூழ்நிலையில் ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்துடன் தமிழக அரசின் உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரியும் 30 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர்கள் மீது அதிக சுமை ஏற்பட்டுள்ளது. இவை வாடிக்கையாளர்கள் தலையில்தான் வைக்கப்படும். ஏற்கனவே அதிக கட்டணத்தால் தியேட்டர் பக்கம் செல்ல தயங்கும்போது இனி இன்னும் கட்டணத்தை உயர்த்தினால் யாரும் தியேட்டர் பக்கம் போகமாட்டார்கள். கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை.

    நாடு முழுவதும் ஒரே வரி என்ற நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் வரி எப்படி தனியாக உள்ளே நுழைந்தது? வேறு மாநிலங்கள் இப்படி தனியாக வரி போடாத நிலையில் தமிழகத்தில் மட்டும் போட்டிருப்பது தியேட்டர்களை பாதிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    அதே நேரத்தில் தியேட்டர்கள் லாபத்தை அள்ளித்தரும் வியாபார களம் மட்டும் அல்ல. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வரவேண்டும். பொழுதை இனிமையாக கழித்து செல்ல வேண்டும் என்ற உணர்வும் தியேட்டர் அதிபர்களிடம் வரவேண்டும். ஒரு வகையில் பார்த்தால் இதுவும் ஒரு சமூக சேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    தன்னை சுற்றி இருக்கும் மக்களை மகிழ்ச்சி படுத்துவது என்பது சாதாரண வி‌ஷயமல்ல. அப்படி ஒரு அற்புதமான காரியத்தை செய்பவர்கள்தான் சினிமா கலைஞர்களும், தியேட்டர் அதிபர்களும்.

    இப்போதைய 58 சதவீத வரி விதிப்பு மேலும் அதிகமான கட்டணத்துக்கு வழிவகுக்கும். ஏற்கனவே தடுமாறும் தொழிலை மேலும் தடுமாற வைக்கும். எனவே அரசு உடனே முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

    அதேபோல் தியேட்டர்களும் பொழுதுபோக்குக்கான இடம். அங்கு செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் இனிமையாகவும், மனநிறைவாகவும் செலவழிக்க வேண்டும் என்ற உணர்வோடு தியேட்டர்களின் சூழ்நிலையை உருவாக்க வேண்டியது அவசியம். ரசிகர்களின் பாக்கெட்டை காலி செய்வதைவிட அவர்களின் மனதை நிறைவு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
    Next Story
    ×