search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மதுரையில் நாளை தொடக்கம்
    X

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மதுரையில் நாளை தொடக்கம்

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தொடங்குகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக நடத்துவது குறித்து மாநில அளவிலான குழு மற்றும் நூற்றாண்டு விழா மலர் குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினை வெளியிட பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பெற்றுக்கொண்டார்.

    மேலும், நூற்றாண்டு விழா விளம்பர குறுந்தகட்டை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் மாநில அளவிலான விழாக்குழு உறுப்பினர்களான அமைச்சர்கள், அரசு துறை மற்றும் அலுவல் சாரா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    எம்.ஜி.ஆரின் உயரிய லட்சியத்தையும், சிறப்பையும் நினைவுகூரும் வண்ணம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரமாண்டமாக நடத்த ஜெயலலிதா ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார். ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் வரை மிக சிறப்பாக கொண்டாட உள்ளது.



    இதன் தொடக்கவிழா நாளை மதுரையில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட உள்ளது.

    மதுரை, பாண்டிகோவில், அம்மா திடலில் தொடக்க விழா நிகழ்ச்சி நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில், சபாநாயகர் ப.தனபால், பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    முன்னதாக பிற்பகல் 2 மணியளவில், விழா மேடையில் எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சியும், பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் பட்டிமன்றமும், யோகியார் ராமலிங்கம் தலைமையிலான யோகா நிகழ்ச்சியும், பரதநாட்டியமும் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×