search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு புகார்: சென்டாக் அதிகாரிகள் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக சம்மன்
    X

    மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு புகார்: சென்டாக் அதிகாரிகள் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக சம்மன்

    புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு புகார் தொடர்பாக, சென்டாக் அதிகாரிகள் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் உயர் மருத்துவ படிப்பில் புதுவை அரசுக்கென 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இடங்களை சென்டாக் நிர்வாகம் மூலம் மாணவர்களை தேர்வு செய்து நிரப்பும் பணி நடந்து வந்தது.

    இதில், முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. இதனால் கவர்னர் கிரண்பேடி நேரடியாக தலையிட்டு விசாரணை மேற்கொண்டார். மாணவர்களை தேர்வை நேரடியாக கண்காணித்தார்.

    ஆனாலும், மாணவர் சேர்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இது சம்பந்தமாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. சென்டாக் மாணவர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கவர்னர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

    மேலும் அவர் இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.

    இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சென்டாக் அலுவலகத்துக்கு வந்தார்கள். அவர்கள் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை வரை சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த ஆவணங்களை 2 பெட்டிகளில் எடுத்து சென்றனர்.

    அவர்கள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் நேற்று இரவே சென்னை திரும்பி விட்டனர்.

    அதே நேரத்தில் சென்டாக் அதிகாரிகள் சிலருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் வழங்கி உள்ளனர். அதில் 2 நாளில் சென்னை அலுவலகத்துக்கு வந்து எங்கள் முன் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    எனவே, சென்டாக் அதிகாரிகளிடம் சென்னையில் வைத்து விசாரணை நடத்தப்பட உள்ளது. அதில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.

    சென்டாக் நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகளும், மருத்துவ கல்லூரிகளும் இணைந்து முறைகேடுகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    எனவே, தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் எந்த நேரத்திலும் சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×