search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கமுடியாவிட்டால் அமைச்சர் பதவி விலக வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன்
    X

    கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கமுடியாவிட்டால் அமைச்சர் பதவி விலக வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன்

    கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் தமிழக அமைச்சர் பதவி விலக வேண்டும் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த கழகங்களின் தவறால் கல்வித்தரம் குறைந்துள்ளது. நீட் தேர்வில் முதல் 25 இடங்களில் ஒரு இடத்தை கூட நம்மால் பிடிக்க முடியாததற்கு காரணம் ஆட்சியாளர்கள்தான்.

    தமிழகம் முன்னேற வேண்டும் என்றால் தமிழகத்தில் கல்வி தரம் முன்னேற வேண்டும். அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை திறன் நிறைந்த ஆசிரியர்களாக மாற்றவேண்டும்.

    படித்து முடித்து விட்டு வேலை இல்லாதவர்களை பள்ளிகளில் தற்காலிகமாக பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும். பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி அரசு சம்பளம் பெறுபவர்கள் யாராக இருந்தாலும், உதவி பெறுபவர்கள் யாராக இருந்தாலும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

    பால், பால் பவுடரில் கலப்படம் உள்ளதாக கூறி வருகிறார்கள். அதை சொல்வதை விட சம்பந்தப்பட்டவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லாவிட்டால் பேசக்கூடாது. நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் உடனடியாக பதவி விலக வேண்டும்.


    கலப்பட பாலை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் பாலாக இருந்தால் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் பாலாக இருந்தால் மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரை மிரட்டுகிறார்கள். பாதுகாப்பு இல்லையென்று கூறுகிறார்கள். அப்படியென்றால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பது புரிந்து கொள்ள வேண்டும்.

    பான் மசாலா, குட்கா விவகாரத்தில் முழுமையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் வாங்கியவர்கள் பட்டியலில் ஒவ்வொரு துறையிலும் முதன்மையாக உள்ளவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

    ருத்ராட்சம் அணிந்த பூனை யாக தி.மு.க. உள்ளது. அவர்கள் எந்த தவறுக்கும் தொடர்பு இல்லாததுபோல் பேசுகிறார்கள். தமிழகம் இவ்வளவு மோசமாக செல்வதற்கு அடிப்படை காரணமே தி.மு.க.தான்.

    ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே அதை எதிர்ப்பது முறையல்ல. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் ஒரு சின்னம் கிடைக்காததால் தேர்தலை தாமதப்படுத்துவதாக கூறுவது சரி அல்ல.

    பெரும் நிறுவனங்கள் முதலீட்டில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால் மட்டுமே முதலிடத்திற்கு வரும்.

    இணயம் துறைமுகம் விவகாரத்தில் வதந்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுய லாபத்திற்காகவும், அரசியல் பிழைப்பாகவும் சிலர் தூண்டி விடுகிறார்கள். தவறான தகவல்களை மீனவ மக்கள் நம்ப வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் பேர் கியாஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 532 பேரும், குமரி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 722 பேரும் மானியத்தொகை விட்டுக்கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×