search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலில் தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்தில் ஓட்டு போட ஏற்பாடு
    X

    ஜனாதிபதி தேர்தலில் தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்தில் ஓட்டு போட ஏற்பாடு

    ஜனாதிபதி தேர்தலுக்காக தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அறைக்கு அருகில் உள்ள குழுக்கள் கூட்ட அரங்கில் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    சென்னை:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த மாதம் 17-ந்தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது.

    பாரதிய ஜனதா சார்பில் பீகார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டு உள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் போட்டியிடுகிறார்.

    இரு வேட்பாளர்களும் களத்தில் உள்ளதால் வாக்குப்பதிவு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதற்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு கீழ் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக சட்டசபை செயலாளர் கே. பூபதி, இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வாக்கு சீட்டு தயாரிப்பது, ஓட்டு பெட்டிகளை வரவழைப்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி சட்டசபை செயலாளர் பூபதியை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    ஜனாதிபதி தேர்தலுக்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அறைக்கு அருகில் உள்ள குழுக்கள் கூட்ட அரங்கில் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.க்கள் இங்கேயும் ஓட்டு போடலாம். இங்கு வரமுடியாவிட்டால் டெல்லி நாடாளுமன்றத்திலும் வாக்களிக்கலாம்.

    ஆனால் எங்கு வாக்களிப்பது என்பதை முன்கூட்டியே தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து அதற்கான அனுமதியை பெற வேண்டும்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு எண்ணப்படும்.
    Next Story
    ×