search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 8 மடங்காக அதிகரிப்பு?
    X

    தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 8 மடங்காக அதிகரிப்பு?

    இலவச திட்டங்கள் மற்றும் வரிவசூலில் கவனமின்மை காரணமாக, தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 5 ஆண்டில் 8 மடங்கு அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இந்த ஆண்டுக்கான (2016-17) நிதிப்பற்றாக்கு ரூ.40 ஆயிரத்து 500 கோடியாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    அதிக நிதிப் பற்றாக்குறை கொண்ட மாநிலங்கள் வரிசையில் உத்தரபிரதேசம், ராஜஸ்தானை அடுத்து தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. ஆனாலும் உத்தர பிரதேசத்தை பொறுத்த வரை கடந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை ரூ.64 ஆயிரத்து 340 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ. 49 ஆயிரத்து 960 கோடியாக குறைந்துள்ளது.

    ஆனால் தமிழ்நாட்டில் நிதிப் பற்றாக்குறை கடந்த ஆண்டைவிட அதிகரித்து இருக்கிறது. 2014-15 நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்கு ரூ. 32 ஆயிரத்து 300 கோடியாக இருந்தது. அது தற்போது அதிகரித்து இருக்கிறது.

    தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு ரூ. 15 ஆயிரத்து 850 கோடியாக உள்ளது. இது கடந்த 5 ஆண்டில் 885 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதாவது 8 மடங்கு இந்த பற்றாக்குறை அதிகமாகி உள்ளது.

    2012-13-ல் ரூ.1,760 கோடி உபரி நிதி இருந்தது. ஆனால் அது அடுத்த ஆண்டு ரூ.1,790 கோடி பற்றாக்குறையாக மாறியது. 2014-15-ம் ஆண்டு நிதி ஆண்டில் 258 சதவீதமும், 2015-16-ல் 48 சதவீதமும், 2016-17-ல் 67 சதவீதமும் பற்றாக்குறை அதிகரித்து உள்ளன.

    இந்த அளவிற்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு இலவச திட்டங்கள் தான் முக்கிய காரணம் என்று கூறுகின்றனர். மேலும் வரி வசூலில் போதிய கவனமின்மை, கடுமையான நடவடிக்கை எடுக்காமை போன்றவையும் வரி வருவாய் பற்றாக்குறைக்கு காரணம் என்று சொல்கின்றனர்.

    இதுசம்பந்தமாக இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தென்மண்டல தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

    இலவச திட்டங்கள் வழங்குவது, குறிப்பாக இலவச மின்சாரம் போன்றவற்றால் தமிழக அரசின் வருவாய் கடுமையாக பாதிப்பை தந்துள்ளது. லாபம் சம்பாதித்து கொடுக்க வேண்டிய தமிழ்நாடு மின்வாரியம் கடுமையாக கடனில் தத்தளிக்கிறது. இது போன்ற சூழ்நிலைகள் தான் இந்த நிலைமைக்கு காரணம்.

    தமிழக நிதிமேலாண்மை ஒழுங்கற்ற நிலையில் உள்ளது. வருவாயை விட செலவு தொடர்ந்து அதிகமாகவே இருந்தால் அது மோசமான விளைவை ஏற்படுத்தும். கடுமையான கடன் சுமையில் தள்ளிவிடும்.

    தமிழ்நாடு இந்தியாவில் அதிக அளவில் வருவாயை உருவாக்கும் மாநிலங்களில் 3-வது இடத்தில் உள்ளது. ஆனாலும் கடன் சுமையில் தள்ளப்பட்டு உள்ளது. இதற்கு உறுதியான நடவடிக்கை எடுத்தால் தான் இதில் இருந்து மீண்டு வரமுடியும்.

    எனவே அரசியல் கட்சிகள், இந்த வி‌ஷயத்தில் மாற்று சிந்தனைகளை உருவாக்கி கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது தமிழ்நாட்டின் கடன் ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் கோடியாக உள்ளது. 2006-07ம் ஆண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 17 ஆயிரத்து 257 கோடியாக இருந்தது. 2012-13-ல் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் இப்போது இந்த அளவிற்கு கடன்சுமை அதிகரித்து இருக்கிறது.

    கடந்த 5 ஆண்டில் தமிழகத்தின் வரிவருவாய் 2 மடங்கு அதிகரித்து ரூ. 90 ஆயிரத்து 690 கோடியாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி ரூ. 13 லட்சத்து 38 கோடியாக உள்ளது. அதாவது வரி வருவாய் உள்நாட்டு உற்பத்தி இரண்டும் சிறப்பாக இருந்தும் நிதிப்பற்றாக்குறை மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×