search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங். - தி.மு.க.வை சேர்ந்த 3 பேருக்கு நியமன எம்.எல்.ஏ. பதவி: நாராயணசாமி ‘திடீர்’ முயற்சி
    X

    காங். - தி.மு.க.வை சேர்ந்த 3 பேருக்கு நியமன எம்.எல்.ஏ. பதவி: நாராயணசாமி ‘திடீர்’ முயற்சி

    புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் - தி.மு.க.வை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.வாக நியமிக்க, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30 பேர் உள்ளனர். இவர்கள் தவிர 3 பேரை அரசே எம்.எல்.ஏ.வாக நியமித்துக் கொள்ள அதிகாரம் உள்ளது. இதன்படி ஒவ்வொரு தடவை புதிய ஆட்சி வரும்போதும் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.வாக நியமித்து கொள்வது வழக்கம்.

    புதுவையில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்படவில்லை.

    நியமன எம்.எல்.ஏ.வை நியமிப்பதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அரசு 3 பேர் பெயரை தேர்வு செய்து அந்த பட்டியலை கவர்னருக்கு அனுப்ப வேண்டும். கவர்னர் இந்த தேர்வு சரியானது என்று கருதினால் அந்த பட்டியலை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைப்பார். மத்திய உள்துறை அதை ஏற்று எம்.எல்.ஏ.க்கள் தேர்வை அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்கும்.

    ஆனால் புதுவையில் அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதால் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க கவர்னர் சம்மதிக்கமாட்டார் என கருதி இவர்களை நியமிப்பதில் அரசு காலம் தாமதித்து வந்ததாக கூறப்பட்டது.

    இப்போது திடீரென 3 பேரை நியமன எம்.எல்.ஏ.வாக நியமிக்க அரசு முயற்சித்து வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துதான் போட்டியிட்டது. எனவே நியமன எம்.எல்.ஏ. பதவியை 2-1 என்ற அடிப்படையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.க்களும், தி.மு.க.வுக்கு 1 எம்.எல்.ஏ.வும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் ரெட்டியார் ஆகியோரையும், தி.மு.க. சார்பில் இளைஞரணி அமைப்பாளர் முகமதுயூனுஸ் ஆகியோரையும் நியமிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளிக்க செய்வதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமியும், காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயமும் டெல்லி சென்றுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். அப்போது தி.மு.க.வில் யாருக்கு பதவி வழங்குவது என்பது பற்றி முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

    3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமா? என்று தெரியவில்லை. இதற்கான சிபாரிசு கோப்பு கவர்னர் வழியாகத்தான் மத்திய அரசுக்கு செல்ல வேண்டும். எனவே கவர்னருக்கு நியமன எம்.எல்.ஏ. சம்மந்தப்பட்ட கோப்பு அனுப்பப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    கிரண்பேடி புதுவை கவர்னராக வந்ததற்கு பிறகு தனக்குத்தான் எல்லா வகையிலும் அதிகாரம் இருக்கிறது என்று கூறி வருகிறார். அதை ஆமோதிக்கும் வகையில் மத்திய உள்துறையும் கடிதம் அனுப்பி உள்ளது.

    அதில் அமைச்சரவை சிபாரிசு இல்லாமலேயே கவர்னருக்கு தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி கவர்னரே தன்னிச்சையாக 3 பேரை நியமன எம்.எல்.ஏ.வாக நியமிக்க சிபாரிசு செய்திருப்பதாகவும், இந்த தகவல் அறிந்து தான் புதுவை அரசு தங்கள் சார்பில் 3 பேரை நியமிக்க உடனடியாக முயற்சி எடுப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

    கவர்னர் சிபாரிசில் பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன், பாரதிய ஜனதா நிர்வாகி சோமசுந்தரம், பிரபல டாக்டரின் மனைவி விஜயாநாராயணன் ஆகியோர் பெயர் சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாக தகவல் பரவியுள்ளது. ஆனால் இது உண்மையா? என்பதை உறுதிபடுத்தமுடியவில்லை.

    நேற்று அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா புதுவை வந்தார். அவர் என்.ஆர். காங்கிரஸ் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரும் நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக கருத்துக்களை கேட்டுள்ளார்.

    புதுவையில் பல்வேறு வாரியங்களில் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது 8 வாரியங்களுக்கு தலைவர்களை நியமிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பதவிகளையும் காங்கிரஸ் - தி.மு.க. பகிர்ந்து கொள்கிறது.

    இதில் புதுவை வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார், காரைக்கால் அமைப்பாளர் நாஜிம் உள்ளிட்டோருக்கும் வாரிய தலைவர் பதவி வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
    Next Story
    ×