search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பில்லா தமிழக மாணவர்கள்
    X

    பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பில்லா தமிழக மாணவர்கள்

    பிளஸ்-2 தேர்வில் மிக அதிக மார்க் எடுத்து இருந்தாலும் கூட நீட் தேர்வு காரணமாக அவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத நிலை ஏற்படலாம்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் இதுவரை எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மார்க் அடிப்படையில் நடந்து வந்தது.

    கடந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனாலும் தமிழ்நாடு, புதுவையில் மட்டும் இதற்கு விதிவிலக்கு பெறப்பட்டது.

    ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

    தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதை அடிப்படையாக வைத்து தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். அதன் பின்னர் தரவரிசை வாரியாக ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

    நீட் தேர்வை மத்திய அரசு நடத்தி இருப்பதால் அவர்களிடம் இருந்து தேர்வு பட்டியலை தமிழக அரசு பெறவேண்டும். அதன் பின்பு தான் தரவரிசை பட்டியல் தயாரிக்க முடியும். எனவே தரவரிசை பட்டியல் எப்போது தயாரித்து வெளியிடப்படும் என்பது தெரியவில்லை.

    அது வெளிவந்தால் தான் எந்தெந்த மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் என்பது தெரியவரும்.

    பிளஸ்-2 தேர்வில் மிக அதிக மார்க் எடுத்து இருந்தாலும் கூட நீட் தேர்வு காரணமாக அவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத நிலை ஏற்படலாம்.

    தமிழ்நாட்டில் என்ஜினீரியங் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடம் பிடித்தவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அவர்களில் 6 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.


    ஆனால் என்ஜினீயரிங் தரவரிசையில் டாப் 10 இடங்களிலும் பிடித்து இருந்தாலும் கூட அவர்களிலும் சிலர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணை பெற்று இருக்கிறார்கள்.

    சவுமியா என்ற மாணவி என்ஜினீயரிங் கட்-ஆப் மார்க் 200 பெற்று 10-வது ரேங் எடுத்து இருந்தார் ஆனால் நீட் தேர்வில் 248 மார்க் தான் கிடைத்து இருக்கிறது. அவர் தாழ்த்தப்பட்டோர் என்ற காரணத்தால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    சோபியா என்ற மாணவி என்ஜினீயரிங் கட்-ஆப்பில் 9-வது ரேங் பெற்று இருந்தார். அவருக்கு நீட் தேர்வில் 341 மார்க் கிடைத்துள்ளது. அவருக்கும் ஏதாவது ஒரு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கலாம்.

    மத்திய ஐ.சி.எஸ்.இ. பாடப்பிரிவில் படித்த ஒரு மாணவர் நீட் தேர்வில் 427 மார்க் பெற்று உள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் மாநில அரசு பாடத்திட்டம் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதால் அவருக்கு சீட் கிடைக்குமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது.

    தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் 300-ல் இருந்து 350 வரை மார்க் எடுத்தவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    தாழ்த்தப்பட்டவர் பிரிவில் 250 மார்க் எடுத்தாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கலாம்.

    தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதி இருக்கிறார்கள். 85 சதவீத இட ஒதுக்கீடு போக மீதி உள்ள 15 சதவீத இடத்தில் தான் அவர்களுக்கு சீட் வழங்கப்படும். எனவே அவர்கள் நீட் தேர்வில் அதிக மார்க் எடுத்து இருந்தாலும் கூட இடம் கிடைப்பது கடினமானதாக இருக்கும்.

    தமிழ்நாட்டில் மொத்த அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,050 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீடாக 450 இடங்கள் வழங்கப்படுகிறது. மீதி 2,594 இடங்கள் தமிழகத்திற்கு உரியதாகும்.

    இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதால் அவர்களுக்கு 2,203 சீட்டுகள் வழங்கப்படும். மற்ற பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு படி 391 இடங்கள் கிடைக்கும்.

    தனியார் மருத்துவ கல்லூரியில் மொத்தம் 1,300 இடங்கள் உள்ளன. அதில் நிர்வாக ஒதுக்கீடாக 517 இடங்கள் சென்று விடும். மாநில அரசு ஒதுக்கீடாக 783 இடங்கள் உள்ளன. அதில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 664 இடங்களும், மற்ற பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 119 இடங்களும் கிடைக்கும்.

    இதே போல பல்மருத்துவ கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுகிறது.
    Next Story
    ×