search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் புதிதாக 500-க்கும் மேற்பட்ட பொருளுக்கு ஜி.எஸ்.டி. வரி: பொது மக்கள் பீதி
    X

    தமிழகத்தில் புதிதாக 500-க்கும் மேற்பட்ட பொருளுக்கு ஜி.எஸ்.டி. வரி: பொது மக்கள் பீதி

    தமிழகத்தில் புதிதாக 500-க்கும் மேற்பட்ட பொருளுக்கு ‘ஜி.எஸ்.டி.’ வரி விலை ஏற்றத்தால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

    ஒரே நாடு! ஒரே வரி! அதுதான் ஜி.எஸ்.டி. வரி!

    - கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் அமலாகும் போது சாமானிய மக்களுக்கு என்ன பயன்? பொருட்கள் விலை குறையுமா? இல்லை மக்கள் தலையில் கை வைக்குமா? என்ற கேள்விக்கு குழப்பமான பதில் தான் எல்லா தரப்பில் இருந்தும் வருகிறது. இந்தியாவில் இப்போதைக்கு மாநிலத்துக்குள் நடக்கும் வியாபாரங்களுக்கு வாட் வரியும், மாநிலங்களுக்கு இடையே நடக்கும் வியாபாரங்களுக்கு சி.எஸ்.டி வரியும், உற்பத்தி பொருட்களுக்கு எக்சைஸ் வரியும், இறக்குமதி பொருட்களுக்கு கஸ்டம்ஸ் வரியும், சேவைகளுக்கான சர்வீஸ் வரியும், இது தவிர எண்ட்ரிடாக்ஸ், ஆக்டிராய், எண்டர்டெயின்மெண்ட் டாக்ஸ், என பல வரிகள் உள்ளது. மாநிலங்களும் மத்திய அரசும் தனித்தனியாக விற்பனைக்கு தகுந்த படி இந்த வரிகளை விதிக்கின்றன.

    அதாவது வாட் வரி, ஆக்டிராய், எண்ட்ரி டாக்ஸ், எண்டர்டெயின்மெண்ட் டாக்ஸ் போன்றவை மாநிலங்களும், எக்சைஸ், கஸ்டம்ஸ், சர்வீஸ், சி.எஸ்.டி. போன்ற வரிகளை மத்திய அரசும் விதிக்கின்றன.

    இதில் மாநிலங்கள் விதிக்கும் மாநில வாட் வரியை மொத்தமாக மாநிலங்களே எடுத்துக் கொள்ளலாம். மத்திய அரசு விதிக்கும் சி.எஸ்.டி.யில் மாநிலங்களுக்கான பங்கு தொகை மட்டும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒரு வியாபாரத்துக்கு ஒரே ஒரு விற்பனை வரி தான் விதிக்கப்படுகிறது. அதில் வாட் வரியை மட்டும் வியாபாரிகள் கழித்துக் கொண்டு பாக்கியை அரசுக்கு கட்டினால் போதும்.

    ஜி.எஸ்.டி. படி இனி, மாநிலத்துக்குள்ளான விற்பனைக்கு இரு அரசுகளும் ஒரே சமயத்தில் வரி விதிக்கும். மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கு மத்திய அரசு மட்டும் வரி விதிக்கும். இந்த வரி விதிப்புமுறை மாநிலங்களுக்கு பெருத்த இழப்பு என்பதால் தான் சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மத்திய அரசு, 5 வருடங்களுக்கு, மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளை திருப்பி தருவதாக சொல்லி இருக்கிறது.

    அதன்பிறகு அனைத்து வரியும் மத்திய அரசுக்கு மட்டுமே, மாநிலங்களுக்கு அதில் சல்லி காசு கிடையாது. அந்தந்த மாநிலங்கள் அந்தந்த வரி வருவாயை வைத்து அவர்களே நிர்வகித்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெளிவாக சொல்லிவிட்டது.

    17 வகையான வரி விதிப்புகள் ரத்து செய்யப்பட்டு ஒரே வரியாக வருகிறது. இனி பல வரிகள் செலுத்துவதற்கு பதில் ஒரே வரி, ஒரே ரிட்டன்ஸ் செலுத்தி வியாபாரிகள் பெரிய சுமையில் இருந்து விடுபடலாம்.

    ஆனால் சாமானியனின் சுமை எப்படி குறையும் என்பதுதான் பெரிய கேள்விக்குறி.

    இப்போதே வரிகள் பதினேழோ... முப்பத்தி நாலோ... ஓட்டலில் சென்று ஒரு தோசை சாப்பிட்டால் கூட தோசை விலை ரூ.75 வாட் வரி, சேவைவரி என்று பல வரிகளையும் குறிப்பிட்டு ரூ.95 என்று வசூலித்து விடுகிறார்கள்.

    என்ன பெயரில் எத்தனை வரி விதிக்கப்பட்டாலும் அந்த வரியையும் சேர்த்து நுகர்வோர்களிடம் வசூலித்து விடுகிறார்கள். எல்லா பொருட்களுக்கும் இதே நிலைதான்.

    ஆக, எந்த பொருளுக்கு எவ்வளவு வரியாக இருந்தாலும் அதை நுகர்வோர்கள் தான் சுமக்க வேண்டும். விற்பனையாளர்கள் அல்லது தயாரிப்பாளர்களின் வருமானத்திலோ, லாபத்திலோ எந்த குறைவும் வரப்போவதில்லை.

    வீட்டுத் தேவைக்கு அரிசியோ, உளுந்தம்பருப்போ, துவரம் பருப்போ சில்லரைக்கு எடை போட்டு வாங்கினால் அதற்கு வரி இல்லை.

    அந்த பொருட்களையே பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்தால் 5 சதவீத வரி உண்டு.

    ஏழை, நடுத்தர மக்கள் கூட பாக்கெட்டுகளில் இருக்கும் பொருட்கள்தான் தரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாங்குகிறார்கள். இனி அந்த மாதிரி பொருட்கள் விலை உயரும். எல்லா வகையான அத்தியாவசிய பொருட்களும் பாக்கெட்டுகளில் விற்பது தான் பே‌ஷனாகவும், பிரபலமாகவும் உள்ளது. எனவே அத்தியாவசிய பொருட்களும் விலை உயருவதற்கான வாய்ப்பே அதிகம்.

    சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் வரி இல்லாத பொருட்களுக்கு இப்போது புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக கையால் செய்யப்படும் தீப்பெட்டிக்கு 5 சதவீதம், வெற்றிலைக்கு 5 சதவீதம், சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேத மருந்துகளுக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சவீதம், சிமெண்டுக்கு 14.5 சதவீதத்தில் இருந்து 28 சதவீதம், சிறிய ஓட்டல்களுக்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இவையெல்லாம் சாதாரண மக்களுக்கு கூடுதல் சுமையாகத்தான் இருக்கும்.

    இந்த வரி சீரமைப்பின் மூலம் எந்த பொருளும் விலை குறைய வாய்ப்பில்லை. அதற்கு மாறாக சில பொருட்கள் விலை உயரத்தான் வாய்ப்பு.

    தங்க நகைகளுக்கு 2.5 சதவீததில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜவுளிகளுக்கும் இதே நிலைதான். இதனால் 1-ந்தேதிக்கு மேல் விலை உயரும் என்ற அச்சத்தில் நகை மற்றும் ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    சென்னை தி.நகர் மற்றும் கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கடைகளில் திருவிழா கூட்டம் போல் கூட்டத்தை பார்க்க முடிகிறது.

    நமது நாட்டை பொறுத்தவரை மாநிலத்துக்கு மாநிலம் விளை பொருள், உற்பத்தி பொருள்கள் மாறுபடும். அதை அந்த அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் வரி விதிக்கப்பட்டது. இனி ஜி.எஸ்.டி வரியில் பஞ்சாபில் அதிகமாக விளையும் கோதுமை, தமிழகத்தில் அதிகம் விளையும் நெல் இவைகளுக்கு எல்லா இடங்களிலும் ஒரே வரி என்றால் சரிப்பட்டு வருமா?

    பெட்ரோல் மற்றும் டூ விலர்களுக்கு ஜி.எஸ்.டி வரியுடன் மத்திய அரசு கூடுதலாக சிறப்பு எக்சைஸ் வரி விதிக்கிறது. இதனால் விலை அதிகரிக்கும்.

    ஜி.எஸ்.டி. கவுன்சில் என ஒரு குழு அமைக்கப்படுகிறது. இதில் மத்திய மாநில அமைச்சர்கள் உறுப்பினர்கள். இவர்களது ‘ஒருமித்த’ கருத்தின் அடிப்படையில் பொருட்களுக்கான வரி விதிப்பு முறை கொண்டு வரப்படும். இதில் பல வட மாநில பிரதிநிதிகள் சிண்டிகேட் அமைத்து சில குறிப்பிட்ட பொருட்களுக்கு லாபி செய்யவும் முடியும். உதாரணமாக சணல் தமிழகத்தில் அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் வட மாநிலங்களில் அது மிக பெரிய வியாபாரம். அதை போல ஸ்பைசஸ் கேரளா, கர்நாடகாவில் முக்கியம். மற்ற மாநிலங்களுக்கு முக்கியமில்லை. எனவே எந்த விதத்தில் வரி விதிப்பு இருக்க போகிறது. அதில் என்னென்ன உள்ளடி அரசியல் விளையாடும். அவை எந்தெந்த வகையில் மாநில தொழில்துறை, விவசாயம் ஆகியவற்றை பாதிக்கும் என்பதை எல்லாம் சொல்ல முடியாது. மேலும் மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் புதிய அரசின் பிரதிநிதிகள் கவுன்சிலுக்கு அனுப்பப்படும் பொழுது அவர்ளது மாறுபாடான கொள்கையும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ஜி.எஸ்.டி. பொருந்துமா என்பதை மத்திய அரசு தெளிவு படுத்தவில்லை. இப்போதே சிறப்பு சலுகை காரணமாக இந்திய சட்டங்கள் அங்கே செல்லாது. அவர்கள் விரும்பினால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள முடியும். ஜி.எஸ்.டி. அங்கே பொருந்தாது என்கிற நிலையில் நமது பொருட்களுக்கு அங்கேயும், அங்குள்ள பொருட்களுக்கு (குங்குமப்பூ, கம்பளி, மலர்கள்) இங்கேயும் வித்தியாசமான வரிவிதிப்பின் கீழ் வரும்.

    மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத்தில் மாநிலங்கள் விரும்பினால் 1 சதவீதம் கூடுதல் வரி விதிக்கலாம் என சொல்லப்பட்டு இருக்கிறது. இதுவும் சீரான வரிவிதிப்பை தகர்க்கும். அதோடு விலை ஏற்றமும் தவிர்க்க முடியாது.

    இந்த வரி சீரமைப்பு என்பது இப்போதைக்கு குழப்பம் நிறைந்ததாகவே இருக்கும். உலகம் முழுவதும் 162 நாடுகளில் இந்த வரி சீரமைப்பு முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. எல்லா நாடுகளுமே பல சிரமங்களை சந்தித்த பிறகு தான் வெற்றிப்பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது.

    நம்நாட்டை பொறுத்த வரை மாநிலத்துக்கு மாநிலம் வரிகள் மாறுபட்டு இருந்து. அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக வரியை பயன்படுத்த தொடங்கியது. உதாரணமாக வடமாநிலங்களில் ஓட்டல் களுக்கு 25 சதவீதத்துக்கு மேல் வரி கட்டி வந்தார்கள். தமிழகத்தில் 11 சதவீத வரிகட்டி வந்தார்கள். இப்போது ஒரே சீராக 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது வடமாநிலங்களுக்கு சந்தோசத்தையும், தமிழகத்துக்கு சங்கடத்தையும் தான் ஏற்படுத்தும்.

    அரசாங்கத்துக்கு வரிகொட்டும் அதே நேரத்தில் வரிவிதிப்பு காரணமாக மக்கள் பல இன்னல்களை தாங்க வேண்டியது வரும்.

    Next Story
    ×