search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் அமித்ஷா சந்திப்பை புறக்கணித்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
    X

    புதுவையில் அமித்ஷா சந்திப்பை புறக்கணித்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

    புதுவையில் அமித்ஷாவுடனான சந்திப்பை என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்திருப்பதால், அவர்களும் என்.ஆர்.காங்கிரசில் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இந்த கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    பாரதிய ஜனதா அகில இந்திய தலைவர் அமித்ஷா கட்சி வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று புதுவை வந்தார். அப்போது கூட்டணி கட்சி தலைவர்கள் அமித்ஷாவை சந்தித்தனர்.

    ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக அவர்கள் பேசினார்கள். என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் அந்த கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களும், அதேபோல அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்களும் அமித்ஷாவை சந்தித்தனர்.

    என்.ஆர். காங்கிரசில் ஒரு எம்.பி., 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் டி.பி.ஆர். செல்வம், திருமுருகன், சந்திர பிரியங்கா, ஆகியோர் நேற்று அமித்ஷாவை சந்திப்பதற்கு வரவில்லை. இவர்களில் டி.பி.ஆர். செல்வம் ஏற்கனவே கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

    சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸ் வெளிநடப்பு செய்தபோது கூட டி.பி.ஆர். செல்வம் அதில் பங்கேற்காமலேயே இருந்தார். எனவே அவர் கட்சியில் அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

    நேற்று அமித்ஷாவுடனான சந்திப்பை திருமுருகன், சந்திரபிரியங்கா ஆகியோரும் புறக்கணித்திருப்பதால் அவர்களும் என்.ஆர். காங்கிரசில் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.

    மொத்தம் உள்ள 8 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் புறக்கணித்திருப்பதால் என்.ஆர். காங்கிரசில் பிளவு ஏற்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

    அமித்ஷாவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தபோது காரைக்கால் எம்.எல்.ஏ.வான அசனா பங்கேற்கவில்லை. முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த அவர் நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால் புதுவைக்கு வரமுடியவில்லை என்று தெரிவித்ததாக அ.தி.மு.க.வினர் கூறினார்கள்.

    Next Story
    ×