search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியில் பாஸ்போர்ட் வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    இந்தியில் பாஸ்போர்ட் வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

    இந்தியில் பாஸ்போர்ட் வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு தேசிய மொழிக்கு இணையான தகுதியை பெற்றுள்ளன. இந்த நிலையில், குடிமக்கள் விரும்பினால் பாஸ்போர்ட்டில் குடிமக்கள் குறித்த ஆங்கில விவரங்களுக்கு அருகில் தங்கள் விவரங்களை தேவநகரி வடிவிலும் இடம் பெறச்செய்யலாம் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.



    குடிமக்கள் விவரங்களை கூடுதலாக இந்தியில் இடம் பெறச்செய்யலாம் என்றால் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் அவற்றைப் பதிவு செய்வதில் எந்த சிரமமும் இருக்காது. எனவே, இரு மொழிகளில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்பது தான் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் நோக்கம் என்றால், 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில், குடிமக்கள் விரும்பும் மொழி மற்றும் ஆங்கிலத்தில் பாஸ்போர்ட் வழங்க முன்வர வேண்டும். மாறாக இந்தியில் மட்டும் கூடுதலாக பாஸ்போர்ட் வழங்குவது இந்தித் திணிப்பாகவே பார்க்கப்படும் என்பதால், அந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் ஒரு அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படூர் என்ற இடத்தில் கல்லூரிக்கு அருகில் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ரவிச்சந்திரபாபு “மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்; கள்ளச்சாராயத்தைக் குடித்து மக்கள் உயிரிழப்பதை தடுப்பதற்காகவே மது விற்கப்படுகிறது என்று அரசின் சார்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டாலே கள்ளச்சாராயத்தை ஒழித்து விட முடியும்” என கூறியிருக்கிறார்.

    மேலும் அவர், “அரசுக்கு வருவாய் ஈட்ட மது விற்பனை ஒரு வழியாக இருக்கலாம். வருமானம் ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ள நிலையில், மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து வருமானம் ஈட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ‘மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு’ என்று மது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது. மதுக் கொள்கையை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழக அரசு உடனடியாக மதுக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

    சென்னை ஐகோர்ட்டுத் தீர்ப்பை மதித்து தமிழகத்தில் வரும் சுதந்திரதின விழாவில் முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியாளர்களை மக்களின் சாபமே சாய்த்து விடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×