search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கதிரவன்
    X
    கதிரவன்

    பத்திரிகை ஊழியர் கடத்தி படுகொலை: மீஞ்சூர் அருகே புதரில் பிணம் வீச்சு - 5 பேர் கைது

    சென்னை சிந்தாதிரிபேட்டையில் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிகை ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பிணம் மீஞ்சூர் அருகே புதரில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை சிந்தாதிரிபேட்டை ரிச்சி தெரு அருகே உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்தவர் கதிரவன் (வயது 47). இவர் ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் அமுதா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அமுதா சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அந்தப் புகார் மனுவில் கூறியதாவது:-

    நாங்கள் வசிக்கும் வீடு எனது மாமனாருக்கு சொந்தமானதாகும். அந்த வீட்டிற்கு எங்களது உறவினர் யூசுப் என்பவர் சொந்தம் கொண்டாடி தகராறு செய்து வந்தார். எனது கணவரின் அக்காள் மகள் ஜெயந்தியை யூசுப் திருமணம் செய்துள்ளார். ரிச்சி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த எனது கணவர் கதிரவனை யூசுப்பும், அவரது நண்பர்களும் சேர்ந்து காரில் கடத்திச் சென்றுவிட்டனர்.

    யூசுப் மீது ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. எனது கணவரை கொலை செய்யும் நோக்கத்தோடு கடத்திச் சென்றிருக்கலாம் என்று அஞ்சுகிறேன். அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. உடனடியாக அவரை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்தப் புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

    கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் முத்தழகு ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    அமுதா அவரது கணவரை கடத்திச்செல்ல பயன்படுத்திய காரின் நம்பரையும் போலீசாருக்கு தெரிவித்து இருந்தார். காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரித்தனர். காருக்கு சொந்தக்காரர் மதுரவாயலில் வசிப்பது கண்டறியப்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கதிரவனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காரை போலீசார் மீட்டனர்.

    காரின் உரிமையாளரின் வீட்டில் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காரின் உரிமையாளரும், யூசுப்பும் நண்பர்கள் என்று தெரிகிறது. அவசரத் தேவைக்காக காரை எடுத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு, யூசுப் காரை எடுத்து வந்துள்ளார். பின்னர் காரை அவரே உரிமையாளர் வீட்டில் விட்டிருக்கிறார்.

    காருக்குள் ரத்தக்கறை படிந்திருந்தது. அதைவைத்து பார்க்கும்போது கதிரவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. யூசுப்பும், அவரது நண்பர்களும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இதற்கிடையில் கதிரவனின் உறவினர்கள் நேற்று காலையில் சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். கதிரவனை கடத்திச் சென்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்தநிலையில் தலைமறைவாக இருந்த யூசுப், அவரது நண்பர்கள் யோகேஷ், கணேசன், ஜெயசிங், பாலசுப்பிரமணியன் ஆகியோரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் கதிரவனை படுகொலை செய்து மீஞ்சூர் அருகே பிணத்தை வீசிவிட்டதாக யூசுப் தெரிவித்தார்.

    சிந்தாதிரிபேட்டை போலீசார் மீஞ்சூர் போலீசாரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது மீஞ்சூரை அடுத்த வல்லூர் தனியார் சிமெண்டு கம்பெனி அருகே புதர் பகுதியில் கதிரவனின் பிணத்தை கண்டுபிடித்து மீஞ்சூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தது தெரிய வந்தது.

    கதிரவனின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. மார்பில் சரமாரியாக கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவரது வலது கையில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. பச்சைக் குத்தப்பட்ட பகுதி நெருப்பால் அழிக்கப்பட்டு இருந்தது.

    கதிரவனின் பிணம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பொன்னேரி போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணன், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் அங்கு தனியாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சிந்தாதிரிபேட்டை போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இரண்டு வழக்குகளும், ஒரே வழக்காக மாற்றப்படும் என்று தெரிகிறது.

    கதிரவனை காரில் வைத்து கொலை செய்து பிணத்தை மீஞ்சூர் அருகே வீசியதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான யூசுப் கதிரவனை கொலை செய்ததது ஏன்? என்று பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    கதிரவன் வசிக்கும் வீட்டிற்கு நான் உரிமை கொண்டாடினேன். இதனால் எனது மனைவியை என்னிடம் இருந்து கதிரவன் பிரித்து விட்டார். அதனால்தான் அவரை கடத்திச் சென்று தீர்த்துக் கட்டினேன் என்று யூசுப் தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த படுகொலை சம்பவம் சிந்தாதிரிபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×