search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மீனவர்கள் 300 பேர் சிறைபிடிப்பு: ஆந்திரா மீனவர்கள் அட்டூழியம்
    X

    சென்னை மீனவர்கள் 300 பேர் சிறைபிடிப்பு: ஆந்திரா மீனவர்கள் அட்டூழியம்

    விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற சென்னை மீனவர்களை ஆந்திரா மீனவர்கள் பைபர் படகுகளில் வந்து சுற்றி வளைத்து 300 பேரையும் சிறை பிடித்தனர்.
    ராயபுரம்:

    சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் 61 நாள் மீன் பிடி தடைகாலம் முடிந்து கடந்த 16-ந்தேதி மீன் பிடிக்க சென்றனர்.

    30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 300 மீனவர்கள் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம், மண்ணூர் கடல் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஆந்திரா மீனவர்கள் பைபர் படகுகளில் வந்து சென்னை மீனவர்கள் 300 பேரையும் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். அவர்களை கரைக்கு அழைத்து சென்று அங்கேயே வைத்துள்ளனர்.

    ஒவ்வொரு படகுக்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை தந்தால் மட்டுமே படகுகளையும், மீனவர்களையும் விடுவிப்போம் என்று ஆந்திரா மீனவர்கள் கூறியுள்ளனர்.

    இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தமிழக மீன் வளத்துறை இயக்குனர் சந்திரா மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் ஆந்திரா புறப்பட்டு சென்றுள்ளனர்.

    இது தொடர்பாக சென்னை செங்கை சிங்கார வேலர் விசைப்படகு உரிமையாளர் சங்க செயலாளர் விஜேஷ் கூறியதாவது:-

    ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு, வார்தா புயல், கடலில் எண்ணெய் கழிவு கலந்த சம்பவம், 61 நாள் மீன் பிடி தடைகாலம் என தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம்.

    வழக்கமாக மீன் பிடி தடை காலம் முடிந்த பிறகு ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம், மண்ணூர் பகுதிகளில்தான் மீன் பிடிப்போம். ஒவ்வொரு வருடமும் ஆந்திரா மீனவர்கள், விசைப்படகுகளையும் சென்னை மீனவர்களையும் பிடித்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×