search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்காசியில் வரதட்சணை கேட்டு பெண் போலீஸ் சித்ரவதை: போலீஸ்காரர் உட்பட 7 பேருக்கு வலை வீச்சு
    X

    தென்காசியில் வரதட்சணை கேட்டு பெண் போலீஸ் சித்ரவதை: போலீஸ்காரர் உட்பட 7 பேருக்கு வலை வீச்சு

    வரதட்சணை கேட்டு பெண் போலீஸ்சை சித்ரவதை செய்த போலீஸ்காரர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    தென்காசி:

    நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கடையநல்லூர் பால அருணாசலபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகள் வீரலெட்சுமி (வயது30) இவர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சங்கரன்கோவில் தாலுகா சின்ன வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ராஜ்குமார் (வயது36) என்பவருக்கும் 25.05.2014-ல் திருமணம் நடைபெற்றது. இவர் சென்னை மாநகர காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

    திருமணத்தின் போது வரதட்சணையாக 30 பவுன் தங்க நகைகள், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பாத்திரங்கள் மற்றும் 50 ஆயிரம் ரொக்கமும் பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில் ராஜ்குமாருக்கு சென்னை ஜாபர்கான்பேட்டை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த வீரலெட்சுமி இதுபற்றி ராஜ்குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் ராஜ்குமாருக்கும் வீரலெட்சுமிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த பிரச்சினை பற்றி வீரலெட்சுமி, ராஜ்குமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். ஆனால் ராஜ்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன்பின் அவர்கள் அனைவரும் வீரலெட்சுமியிடம் இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதோடு அவருக்கு எதிராகவும் செயல்படத் தொடங்கினர்.

    வீரலெட்சுமியின் தங்கநகைகளை அடகு வைத்னர். அதன்பின் ராஜ்குமார் மற்றும் அவரது தாயார் பொன்னுத்தாய், உறவினர்கள் ராணி,சரஸ்வதி, ஜெயலெட்சுமி, கணேசன், முருகேசன் ஆகியோர் வீரலெட்சுமியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் வீரலெட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்ப்பதற்கு கூட ராஜ்குமார் உட்பட அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை.

    தனது உறவினர்கள் மூலம் பலமுறை ராஜ்குமாரை அழைத்து பேச முயற்சி மேற்கொண்ட நிலையிலும், ராஜ்குமாரும் அவரது உறவினர்களும் மேலும் 3 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் ராஜ்குமாருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்கிறோம் என்று நிபந்தனை விதித்துள்ளார்கள்.

    இதுபற்றி வீரலெட்சுமி தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் ‘எனது கணவர் ராஜ்குமார் சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொணடு என்னை அடித்து துன்புறுத்துவதோடு உறவினர்களிடம் சேர்ந்து கூடுதலாக வரதட்சணை கேட்டு அடித்து , உதைத்து துன்புறுத்தி வருகிறார். எனவே எனது கணவர் ராஜ்குமார் உட்பட 7 பேர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’. என கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரலெட்சுமியின் கணவர் ராஜ்குமார் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×