search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பேரறிவாளனுக்கு பரோல் மறுப்பா?: ராமதாஸ் கண்டனம்
    X

    26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பேரறிவாளனுக்கு பரோல் மறுப்பா?: ராமதாஸ் கண்டனம்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பரோல் மறுப்பா என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்க தமிழக அரசு மறுத்து விட்டது.

    சிறையில் அவரது நடத்தை அனைவராலும் பாராட்டப்பட்டிருக்கிறது.

    சிறையில் இருந்தபடியே படித்து ஏராளமான பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றிருப்பதுடன், சக கைதிகளையும் ஊக்குவித்து பட்டம் பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு சிறை விடுப்பு வழங்க அவரது நடத்தை எந்த வகையிலும் தடையாக இருக்காது.

    தம்மை சிறை விடுப்பில் விடுவிப்பதற்காக பேரறிவாளன் முன்வைத்துள்ள காரணங்கள் அனைத்தும் உருக்கமானவை; மறுக்க முடியாதவையாகும்.

    பேரறிவாளனின் 75 வயது தந்தை ஞானசேகரன் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ளார். அவரின் 69 வயது தாயார் அற்புதம் அம்மாள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, பலமுறை சாலைகளில் மயக்கமடைந்து விழுந்திருக்கிறார்.

    அவர்களை கவனித்துக் கொள்ளயாரும் இல்லாத நிலையில், அவர்களின் மகனாக சிறிது காலம் பெற்றோரை கவனித்துக் கொள்ளும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பேரறிவாளன் சிறை விடுப்பு கோரியிருக்கிறார். இதைக்கூட வழங்க மறுப்பது நியாயமற்றது.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது பேரறிவாளன் உட்பட ராஜிவ் கொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், அதனால் அவர்களை விடுதலை செய்யப்போவதாகவும் அறிவித்தார்.

    அப்போதிருந்த மத்திய அரசு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததால் அவர்களை இன்னும் விடுதலை செய்ய முடியவில்லை. ஒருவரை விடுதலை செய்யவே மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும்போது சிறை விடுப்பில் வெளியிட அதிகாரம் இல்லை என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.


    இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாக பினாமி அரசு விரும்ப வில்லை என்பது தான் சிறைவிடுப்பு மறுப்புக்கு காரணமாகும்.

    சிறை விடுப்புக் கோரிக்கையை நிராகரிப்பதற்காக சிறைத்துறையும், தமிழக அரசும் சுட்டிக்காட்டியுள்ள மத்திய சட்டங்களின்படி விதிக்கப்பட்ட தண்டனையை பேரறிவாளன் அனுபவித்து முடித்து விட்டார்.

    இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை மட்டும் தான் இப்போது அவர் அனுபவித்து வருகிறார். இப்படிப்பட்ட ஒருவரை விடுவிக்க எந்தத் தடையும் இல்லை என்பதால் பேரறிவாளனை உடனடியாக சிறை விடுப்பில் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×