search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்னிய செலாவணி மோசடி வழக்கு: வீடியோ கான்பரன்ஸ் மூலம் சசிகலாவிடம் விசாரணை
    X

    அன்னிய செலாவணி மோசடி வழக்கு: வீடியோ கான்பரன்ஸ் மூலம் சசிகலாவிடம் விசாரணை

    அன்னிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
    சென்னை:

    பெங்களூர் சிறையில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சுதாகரன் மற்றும் டி.டி.வி.தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை சார்பில் அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.

    வழக்கு விசாரணை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் கடந்த 20 வருடங்களாக நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக டி.டி.வி.தினகரன் பலமுறை எழும்பூர் கோர்ட்டில் ஆஜரானார். அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது, வாடகைக்கு எடுத்தது ஆகியவற்றில் நடந்த அன்னிய செலாவணி விதி மீறல் தொடர்பான வழக்கு விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் தனியாக நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட இருப்பதால் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டு இருந்தார்.


    அதன்படி சுதாகரன் பெங்களூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பாஸ்கரனும் அவருடன் ஆஜர்படுத்தப்பட்டார். இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

    பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கோர்ட்டில் ஆஜராக அனுமதிக்குமாறும், கேள்விகளை முன்கூட்டியே தனக்கு அளிக்குமாறும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதில் சசிகலா வீடியோ கான்பரன்ஸ் மூலம் கோர்ட்டில் ஆஜராக மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்தார். ஆனால் முன் கூட்டியே கேள்விகளை அனுப்பும் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

    இன்று சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா பெங்களூர் சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலம் எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

    வீடியோ கான்பரன்சுக்கான ஏற்பாடுகளை கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் பெங்களூர் சிறையில் செய்து இருந்தது. இதேபோல் எழும்பூர் கோர்ட்டிலும் தனி அறையில் வீடியோ கான்பரன்சுக்கான வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    வீடியோ கான்பரன்ஸ் மூலம் சசிகலாவிடம் நீதிபதி ஜாகீர்உசேன் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார். சிறை கைதி உடையில் இருந்த சசிகலாவிடம் நீதிபதி தமிழில் கேள்விகள் கேட்டார்.

    அவர் அளித்த பதில்களை நீதிபதி பதிவு செய்து கொண்டார். தன் மீதான அமலாக்கப்பிரிவின் குற்றச்சாட்டுகளை சசிகலா மறுத்தார்.

    தொடர்ந்து சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறைகள் சுமார் 50 நிமிடம் நடந்தது.

    பின்னர் ஜூலை 1-ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
    Next Story
    ×