search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் 30-ந்தேதி நள்ளிரவு கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் - த.வெள்ளையன்
    X

    ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் 30-ந்தேதி நள்ளிரவு கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் - த.வெள்ளையன்

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் 30-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு கருப்புக் கொடி ஏற்றி சுயதொழில்களுக்கும், சுதந்திரத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தை மக்களுக்கு உணர்த்திடுமாறு த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    1947 ஆகஸ்ட் 14-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. அடிமைத் தனம் ஒழிந்தது, அன்னிய ஆதிக்கம் அழிந்தது எனும் நம்பிக்கை ஒவ்வொரு இந்தியனுக்கும் ஏற்பட்டது.

    2017-ல் 70 வருடங்களுக்குப் பிறகு நமது அந்த நம்பிக்கைக்கு நேர் எதிராக நள்ளிரவு நேரத்தில், ஊரே அடங்கிய பிறகு திருடன் வீட்டுக்குள் நுழைகிற மாதிரி ஜி.எஸ்.டி. எனும் அந்நிய வரித்திணிப்பை மோடியும், பிரணாப் முகர்ஜியும் சேர்ந்து இந்தியாவுக்குள், கட்டவிழ்த்து விடப் போகிறார்கள். இது உள்நாட்டு அனைத்து சுயதொழில்களையும் வீழ்த்தி, அந்நிய ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும்.



    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டிருப்பதாக சொல்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மாற்றம் என்று சொல்லப்படுகிறது. இதை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? மக்கள் கருத்தை அறியாமலேயே இந்த மோசடி கட்டவிழ்த்து விடப்படுகிறது.

    இதற்கு நமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில் இந்த சட்டம் அரங்கேற்றப்படும் அதே நள்ளிரவு 12 மணிக்கு, தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் கறுப்புக் கொடி ஏற்றி நாட்டுக்கும், மக்களுக்கும், சுயதொழில்களுக்கும், சுதந்திரத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தை மக்களுக்கு உணர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு வெள்ளையன் கூறியுள்ளார்.
    Next Story
    ×