search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தல் ஆதரவு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், தினகரன் சசிகலாவுடன் சந்திப்பு - முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி
    X

    ஜனாதிபதி தேர்தல் ஆதரவு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், தினகரன் சசிகலாவுடன் சந்திப்பு - முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி

    ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக தம்பிதுரை, தினகரன் ஆகியோரை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரும் சசிகலாவை சந்தித்ததால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? மற்றும் உள்கட்சி பிரச்சினைகளில் எத்தகைய முடிவு எடுப்பது? என்பது போன்ற வி‌ஷயங்களில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய அனைத்துத் தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதில் இறுதி முடிவு யார் எடுப்பது என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது.

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த சலசலப்பு பற்றி தெரியவந்ததும் இரு தரப்பினருக்கும் சசிகலா அழைப்பு விடுத்தார். அதன் பேரில் நேற்று தம்பித்துரை, தினகரன் மற்றும் அவர் குடும்பத்தினர் பெங்களூர் சென்று சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேசினார்கள்.

    முதலில் தம்பித்துரை பேசினார். பிறகு டி.டி.வி. தினகரன் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்கள். ஆட்சியிலும், குடும்பத்திலும் நடக்கும் சில நிகழ்வுகள் பற்றி அவர்கள் விரிவாக விவாதித்ததாக தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முருகன் (அரூர்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை) உள்பட 5 எம்.எல்.ஏ.க்களும் நேற்று பெங்களூர் சென்றிருந்தனர். அவர்கள் 5 பேரும் சிறைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சசிகலாவை சந்தித்து பேசினார்கள்.

    ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பது பற்றி அவர்கள் நீண்ட நேரம் ஆலோசித்தனர். அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.



    இதற்கிடையே முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோரும் பெங்களூருக்கு சென்றிருந்தனர். அவர்கள் இருவரும் சசிகலாவை தனியாக சந்தித்து பேசினார்கள்.

    அவர்கள் அ.தி.மு.க. உட்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை பற்றி பேசியதாக தெரிகிறது. அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து சந்தித்து பேசியதால் நேற்று சிறையில் சசிகலா மிகவும் பிசியாக காணப்பட்டார்.
        
    ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிடுவது தொடர்பாகவே சசிகலா நீண்ட நேரம் விவாதித்ததாக கூறப்படுகிறது. எனவே சசிகலா தரப்பில் இருந்து அல்லது அவர் அறிவுறுத்தலின் பேரில் டி.டி.வி.தினகரனிடம் இருந்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இனி அடிக்கடி சசிகலாவுடன் சந்திக்க வைக்க தினகரனின் தீவிர ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அ.தி.மு.க. கட்சி, சசிகலா குடும்பத்திடம்தான் இருக்கிறது என்பதை வெளி உலகுக்கு காட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை அழைத்து சசிகலா பேசி இருப்பதில் இருந்து அவர் சிறைக்குள் இருந்தபடி அரசியலை நடத்த முயற்சி செய்வது உறுதியாகி உள்ளது. சசிகலாவின் இந்த நடவடிக்கைகள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமான நெருக்கடியாக மாறியுள்ளது.

    இந்த நெருக்கடியை சமாளிக்க அவர் அ.தி.மு.க. மூத்த அமைச்சர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தியபடி உள்ளார்.
    Next Story
    ×