search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றினர்
    X

    தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றினர்

    படகில் தண்ணீர் புகுந்து கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். அந்த படகை சரி செய்து, தமிழகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
    சென்னை:

    இலங்கை கடற்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள கோவிலம் கடற்கரையில் இருந்து 18 கடல் மைல் தூரத்தில், 18-ந் தேதி (நேற்று) தமிழக மீனவர்கள் 3 பேர் வந்த மீன்பிடி படகில் தண்ணீர் ஏறி, அவர்கள் உயிருக்கு போராடி வருவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, இலங்கை வடக்கு மாகாணம், கடற்படை ரியர் அட்மிரல் ஜெயந்தா டி செல்வா தலைமையில் கடற்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு இந்திய மீனவர்கள் படகில் ஓட்டை விழுந்து, அதன் வழியாக படகுக்குள் தண்ணீர் புகுந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து அவர்களுக்கு இலங்கை கடற்படையினர் உடனடியாக உதவிகளை செய்தனர். ‘மோட்டார் பம்பு’ மூலம், படகில் இருந்த தண்ணீரை வெளியில் எடுத்தனர். படகில் விழுந்த ஓட்டையை, நிபுணர்கள் மூலம் உடனடியாக சரி செய்யப்பட்டது. பின்னர், இந்த படகை, தமிழகத்தில் உள்ள துறைமுகத்துக்கு இழுத்துச் செல்வதற்காக மற்றொரு படகில் வந்த இந்திய மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



    இந்த உதவியை சரியான நேரத்தில் இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளவில்லை என்றால், அந்த 3 மீனவர்களும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருப்பார்கள். இதுபோன்ற துயர சம்பவத்தில் நடுக்கடலில் சிக்கும் மீனவர்களை காப்பாற்ற வடக்கு மாகாணம் கடற்படையினர், ரியர் அட்மிரல் ஜெயந்தா டி செல்வா தலைமையில் எப்போதும் தயாராக இருப்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×