search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதி நெருக்கடியை போக்க நகராட்சி இடங்களை மீட்க வேண்டும்: அன்பழகன் பேச்சு
    X

    நிதி நெருக்கடியை போக்க நகராட்சி இடங்களை மீட்க வேண்டும்: அன்பழகன் பேச்சு

    நிதி நெருக்கடியை போக்க நகராட்சி இடங்களை மீட்க வேண்டும் என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் உள்ளாட்சி துறை, பொதுப் பணி உள்ளிட்ட மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் பேசியதாவது:-

    புதுவை உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மக்கள் ஜனத் தொகைக்கு ஏற்ப மாநகராட்சியாக மாற்றம் செய்ய வேண்டும், வில்லியனூர், பாகூர், அரியாங்குப்பம் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துக்களை இணைத்து நகராட்சிகளாக மாற்றம் செய்ய வேண்டும், நிதி நெருக்கடியில் இருந்து உள்ளாட்சி துறையை மீட்க வரி வசூலை செம்மை படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கேபிள் டி.வி. வரியை முறைப்படுத்தினாலே ஆண்டுக்கு ரூ.10 கோடி வரி ஏய்ப்பை தடுக்க முடியும். மொத்தமுள்ள கேபிள் டி.வி. இணைப்பில் 10ல் ஒரு பங்கு கூட கணக்கு காட்டப்படவில்லை. 25 வருடத்திற்கு முன் வணிக உரிமம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் இன்று வரை மாற்றம் செய்யப்படவில்லை. தமிழ் பெயரில் படம் எடுத்தால் கேளிக்கை வரிகள் ரத்து செய்ததால் பல கோடி வருவாய் இழப்பு.

    நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை என்ன வாங்கப்படுகிறது. நியூடோன் தியேட்டர், கம்பன் கலையரங்கம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட பல இடங்களை மீட்க வேண்டும். தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனை, மத்திய அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் சொத்து வரி வசூல் செய்ய வேண்டும். செல்போன் டவருக்கு வரி விதிக்க வேண்டும். கமர்ஷியல் வரி உயர்த்த வேண்டும். கண்காட்சி, பொருட்காட்சி நடத்தும் போது டிக்கெட் விற்பனையில் 35 சதவீதம் கேளிக்கை வரி வசூல் செய்ய வேண்டும்.

    அனுமதிக்கப்படாத செல்போன் டவர்கள் அதிகமாக இருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் அனுமதியில்லாமல் உள்ளது. உள்ளாட்சித்துறை வரி கூட விதிக்கவில்லை. 15 அடி சாலையில் 100 அடிக்கு மேல் உயர்த்தி செல்போன் டவர் அதிகப்படியான அலை கற்றையினால் பிளட் கேன்சர், பிரைன் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் அதிகம் வருகிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரிய மார்க்கெட் நிலைமையை உடனே சரி செய்ய வேண்டும், 600 கடைகளுக்கு மேல் உள்ளன. ஆண்டுக்கு ரூ.40 லட்சம் தான் வருவாய் வருகிறது. 300, 400, 600 ஆண்டு வாடகை என்ற வகையில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. கீழ் வாடகை, மேல் வாடகை, பகிடி என லட்சக்கணக்கில் கைமாறும் கடைக்கு வாடகை உயர்த்தும் எண்ணம் அரசிற்கு இல்லை. மார்க்கெட் கடைகள் தவிர்த்து நடைபாதைகள் எல்லாம் கடைகளாக மாற்றப்பட்டுள்ளது.

    போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மக்கள் மார்க்கெட் உள்ளே சென்றாலே நீந்திதான் வெளியே வர முடிகிறது. 1000க்கணக்கான மக்கள் சென்று வரும் மார்க்கெட்டில் குடிதண்ணீர் வசதியில்லை. போதிய டாய்லட் வசதி கூட இல்லை. ஒரு மழை பெய்தால் கூட உள்ளே போக முடியாது, சேரும் சகதியுமாக ஆகிவிடும், தரை கூட ஒழுங்காக இல்லை. சரியாக பராமரித்து வாடகையை முறைப்படுத்தினாலே பல கோடி ரூபாய் பெரிய மார்க்கெட்டில் இருந்து வருவாய் வரும்.

    நகர பகுதியில் பல வீடுகள் கெஸ்ட் ஹவுஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. எவ்வித பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளாட்சித் துறை அனுமதி வழங்குவது தவறான ஒன்றாகும். மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பக்கத்திலேயே கெஸ்ட் ஹவுஸ் பர்மி‌ஷன் கொடுத்ததால் சனி, ஞாயிறு கிழமைகளில் பெங்களூர் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா இளைஞர்களும்,  அடிக்கும் கொட்டம் தாங்க முடியவில்லை.

    நகர பகுதியில் குடியிருக்கும் வீடுகளுக்கு வழங்கப்பட்ட கெஸ்ட் ஹவுஸ் உரிமங்களை உடனே ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் பேசினார்.

    Next Story
    ×