search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் குற்றம் சாட்டிய கவர்னர் மீது வழக்கு: நாராயணசாமி சட்டசபையில் அறிவிப்பு
    X

    ஊழல் குற்றம் சாட்டிய கவர்னர் மீது வழக்கு: நாராயணசாமி சட்டசபையில் அறிவிப்பு

    புதுவை அரசை விமர்சித்த கவர்னர் மீது வழக்குதொடரப்படும் என சட்டசபையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மருத்துவ கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு மருத்துவ இடங்கள் பெற்றது, கட்டணம் நிர்ணயித்தது, நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இடங்களை பெற எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாக அறிக்கையை சமர்ப்பித்தார்.

    இந்த அறிக்கைக்கு காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்து பேசினர். அமைச்சர் கந்தசாமி பேசும்போது, மருத்துவ இடங்களை பெற்றதில் ஊழல் நடந்துள்ளது, அமைச்சர்கள் பணம் பெற்றுக்கொண்டு செயல்படுகின்றனர் என தவறான தகவல்களை கவர்னர் தெரிவித்துள்ளார்.

    இப்படி ஆதார மில்லாமல் தவறான குற்றச்சாட்டை கூறி வந்தால் ஆட்சி எப்படி சிறப்பாக இருக்க முடியும்? எனவே, சபாநாயகர் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் டெல்லி சென்று ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரியை சந்தித்த கவர்னரை திரும்ப பெற கோரிக்கை வைக்க வேண்டும் என்றார்.

    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசும் போது, கவர்னரின் தூண்டுதலால் அரசு செயலர் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இது வரும்காலத்தில் புதுவையில் மிகப்பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது தவறான முன்னுதாரணம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


    அப்போது சபாநாயகர் வைத்திலிங்கம் குறுக்கிட்டு, அரசை பற்றி தவறாக பேசியவர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை ஏதும் கொண்டுவர போகிறீர்களா? என முதல்- அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, அரசின் மீது வேண்டும் என்றே களங்கம் விளைவிக்கும் வகையில் ஊழல் செய்து விட்டார்கள் என குற்றம் சாட்டியவர்கள் (கவர்னர்) மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார்.

    புதுவை அரசை விமர்சித்த கவர்னர் மீது வழக்குதொடரப்படும் என சட்டசபையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×