search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் மணல் தட்டுப்பாடு: கட்டுமான பணிகள் முடங்கியது
    X

    புதுவையில் மணல் தட்டுப்பாடு: கட்டுமான பணிகள் முடங்கியது

    புதுவையில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கிய நிலையில் உள்ளது. ஒரு லோடு மணல் தற்போது ரூ.35 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை தொடர்ந்து வளர்ந்து வரும் நகரம் என்பதால் இங்கு ஏராளமான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என எல்லா பகுதியிலும் கட்டுமான பணிகள் நடக்கின்றன.

    இந்த பணிகளுக்கான ஆற்றுமணல் புதுவையில் இல்லை. புதுவையில் சங்கராபரணி ஆறு மட்டும் ஓடுகிறது. இதில் இருந்த மணல் ஏற்கனவே முற்றிலும் எடுக்கப்பட்டு விட்டன. எனவே புதுவை கட்டுமான பணிக்கு தமிழ்நாட்டில் இருந்து தான் மணல் கொண்டுவரப்பட்டது.

    சில மாதங்களுக்கு முன்புவரை ஒரு லாரி மணல் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரம் வரை விற்பனையானது. ஒரு லாரியில் 3½ யூனிட் மணல் இருக்கும். சமீபத்தில் தமிழ்நாட்டில் சில மணல் குவாரிகள் மூடப்பட்டன.

    இதனால் தமிழ்நாட்டிலேயே மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு புதுவைக்கு மணல் வருவது குறைந்துவிட்டது. முன்பு பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை, சிதம்பரம் அருகே உள்ள திருப்பாலூர், திட்டம்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து மணல் வந்து கொண்டிருந்தது.

    இப்போது அங்கிருந்து மணல் வருவது நின்றுவிட்டது. திருச்சி பகுதியில் இருந்து மணல் கொண்டுவருகிறார்கள். இதற்கு முன்பு ஒரு லாரி சென்றால் 2 அல்லது 3 நாட்களில் மணல் ஏற்றி திரும்பி வந்துவிடும். எனவே விலையும் குறைவாக இருந்தது.

    தற்போது மணல் ஏற்ற செல்லும் லாரி திரும்பி வர 10 நாட்கள் கூட ஆகிறது. எனவே லாரி வாடகை எகிறி மணல் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லோடு மணல் புதுவை வந்து சேருவதற்கு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை ஆகிறது.

    பின்னர் வியாபாரிகள் லாபம் பார்த்து அந்த மணலை உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு அனுப்புகிறார்கள். இதனால் ஒரு லோடு மணல் தற்போது ரூ.35 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

    அப்படி இருந்தும் கூட போதுமான அளவுக்கு மணல் வரவில்லை. வருகிற மணலும் உரிய தரத்துடன் இல்லை. இந்த மணலை கொண்டு கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்தால் கட்டுமான செலவு அதிகமாகும். கட்டிடமும் தரமாக இருக்காது என்ற காரணத்தால் பெரும்பாலானோர் கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டனர். இதனால் புதுவையில் கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கிய நிலையில் உள்ளது.

    கட்டுமான பணி நடக்காததால் இதில் உள்ள தொழிலாளர்களும் வேலை இழந்து தவிக்கிறார்கள். புதுவை அரசு ஏதாவது சிறப்பு ஏற்பாடு செய்து புதுவையில் தாராளமாக மணல் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் தான் இதற்கு தீர்வு ஏற்படும் என்று கட்டுமான தொழிலில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.
    Next Story
    ×