search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமாம்பாக்கத்தில் அரசு காண்டிராக்டர் வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை
    X

    கிருமாம்பாக்கத்தில் அரசு காண்டிராக்டர் வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை

    கிருமாம்பாக்கத்தில் போலீஸ் நிலையம் எதிரி வசித்து வரும் அரசு காண்டிராக்டர் வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை போனது. இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே வசித்து வருபவர் தட்சணாமூர்த்தி (வயது 52). இவர் புதுவையில் அங்கன்வாடிகளுக்கு மளிகை பொருட்கள் சப்ளை செய்யும் காண்டிராக்டு எடுத்து உள்ளார்.

    கடந்த 5-ந்தேதி இவரது மகனுக்கு விமரிசையாக திருமணத்தை நடத்தினார். இதையடுத்து கடந்த 8-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றார்.

    இன்று அதிகாலை 5 மணிக்கு தட்சணாமூர்த்தி வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்து 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு தட்சணாமூர்த்தி திடுக்கிட்டார்.

    பீரோவில் வைத்திருந்த பழைய நகை 10 பவுன் மற்றும் மகனுக்கு சீர்வரிசையாக வந்த 18 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.60 ஆயிரம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதன் மதிப்பு ரூ.10 லட்சமாகும். யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை - பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தட்சணாமூர்த்தி உடனே வீட்டின் எதிரே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம், இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாயை வரவழைத்து துப்பு துலக்கியபோது மோப்பநோய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விபிடிக்கவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் கந்தசாமியும் சம்பவ இடத்துக்கு வந்தார். நகை-பணத்தை இழந்த தட்சணாமூர்த்தி குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கந்தசாமி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக பிடித்து பொருட்களை மீட்டு தரும்படி போலீசாரிடம் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×