search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனது பணியை சரியாக மேற்கொள்கிறேன்: நாராயணசாமிக்கு  கிரண்பேடி பதிலடி
    X

    எனது பணியை சரியாக மேற்கொள்கிறேன்: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதிலடி

    “மாணவர் நலனே முக்கியம்” எனது பணியை சரியாக மேற்கொள்கிறேன் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதிலடி கொடுத்து பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல் - அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது.

    புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் தனக்கே முழுமையான அதிகாரம் இருப்பதாக கூறி கவர்னர் கிரண்பேடி அரசின் அன்றாட பணிகளில் தலையிட்டு வருகிறார். அதோடு அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்களை சமூக வலை தளங்களிலும் விமர்சனம் செய்து வருகிறார்.

    இதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், இவர்கள் கவர்னர் கிரண்பேடியும், முதல்- அமைச்சர் நாரயணசாமியும் ஒருவர் மீது ஒருவர் மத்திய அரசிடம் புகாரும் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீடு இடங்களை நிரப்புவதில் தவறுகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது.

    இதையடுத்து கவர்னர் கிரண்பேடி நேரில் சென்டாக் அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். அதோடு மாணவர் சேர்க்கையில் சில மாற்றங்களையும் செய்தார்.

    இதனால் மீண்டும் கவர்னர்- அமைச்சரவை இடையே மீண்டும் மோதல் உருவானது. இந்த விவகாரம் புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்ட தொடரில் எதிரொலித்தது. மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு அறிக்கையை தாக்கல் செய்து பேசினார்.

    அவர் பேசும் போது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை கவர்னர் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், சமூக வலைதளங்களிலும், புதுவை அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் விமர்சிக்க கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறினார்.

    இந்த நிலையில் கவர்னர் பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி கிரண்பேடியின் சாதனைகள் என்ற புத்தக வெளியீட்டு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது.


    புத்தகத்தை கவர்னர் கிரண்பேடி வெளியிட்டு பேசும் போது, முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு பதிலடி கொடுத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    நான் எனது பணியை சரியாக மேற்கொள்கிறேன். நான் யாரையும் தனிப்பட்ட முறையில் சமூக வலை தளங்கள் மூலமாக விமர்சிக்கவில்லை. அப்படி எதுவும் தவறாக பதிவிடப்பட்டு இருந்தால் சமூக வலைதளங்களின் வாயிலாகவே மறுப்பு தெரிவித்து இருக்கலாம். ஒரு வேளை என் பதிவுகளை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கலாம். மாணவர்களின் நலனே எனக்கு முக்கியம். எனது முழுமையான பணியை என் வாழ்நாள் முழுவதும் மேற்கொள்வேன்.

    இவ்வாறு கிரண்பேடி பேசினார்.

    இடையில் சில காலம் கவர்னர்- அமைச்சர்கள் இடையான மோதலில் அமைதி நிலவியது. தற்போது இரு தரப்பினரும் ஒருவரையொருவர் விமர்சித்திருப்பதன் மூலம் மீண்டும் மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×